
கோலப்பிலா, ஜூலை 25-
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் (PRN) பிரசார காலத்தில் இன, மதம் தொடர்பான விவகாரங்களை அரசியல் பிரசாரமாக பயன்படுத்த வேண்டாம் என்று கெடா மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ முகம்மது சானுசி முகம்மது நோருக்கு, பாரிசான் நேஷனல் (BN) தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்குவதே சானுசியின் நோக்கமாக இருந்தால், இனம், மதம், கலாசாரம் மற்றும் பிற சமூகப் பின்னணிகளைப் பற்றிய விவகாரங்களை எழுப்பத் தேவையில்லை.
அவை பல்வேறு சமூகங்களிடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
“அவருடைய நோக்கம் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதாக இருந்தால், இனம், மதம், கலாசாரம் மற்றும் நாட்டின் பிற சமூகங்களின் பின்னணியைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.
நமது நாட்டின் பன்முக சமூக அமைப்பும், பல்வேறு பின்னணிகளும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட இயல்பான ஒன்றாகும். எனவே, இத்தகைய விஷயங்களை தேவையின்றி பேச வேண்டாம்.
உண்மையிலேயே நட்புறவை வளர்க்க விரும்பினால், அதற்கான சரியான முறையில் செயல்பட வேண்டும்; பிற விஷயங்களைத் தொடக்கூடாது.
மேலும், வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) வரை இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. அதற்குள் அவர் தனது நேரத்தை கெடா மாநில நிர்வாகத்தில் செலவிடுவது நல்லது.
நெகிரி செம்பிலானுக்கு வர வேண்டிய அவசியமில்லை. நெகிரி செம்பிலானை எங்களுடைய முறையில் நாங்களே நிர்வகித்துக் கொள்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
ஜாஹிட் ஹமிடி, இன்று கோலா பிலாவில் நடைபெற்ற Program Salam Agrikomoditi MADANI நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

