

செ.வே.முத்தமிழ் மன்னன்
சிரம்பான், ஜூலை 30 –
இந்திய சமூகத்தைச் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் இனி தாம் நேரடியாக மேற்பார்வையிட்டு கண்காணிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இந்திய சமூகத்தினரிடமிருந்து தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த புகார்களும் கிடைத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ராமணன் தலைமையிலான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (MITRA) தொடர்பான அரசால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் பணிகளை அவர் தொடர்ந்து முன்னெடுப்பார் என்றும் பிரதமர் கூறினார்.
“இதற்கு முன்பு இந்த விவகாரங்களை கவனிக்குமாறு டத்தோஸ்ரீ இரமணனை நியமித்திருந்தேன்.
ஆனால் இனி மித்ரா மட்டுமல்லாமல், இந்திய சமூகத்தைச் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் நானே நேரடியாக பொறுப்பேற்று கண்காணிப்பேன்.
டத்தோஸ்ரீ இரமணன் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திட்டங்களையும் பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்துவார்.
ஆனால் இந்திய சமூகத்தின் பிரச்சினைகள் உரிய கவனத்தைப் பெறுவதை நான் தனிப்பட்ட முறையில் உறுதி செய்வேன்,” என்று நெகிரி செம்பிலானில் இந்திய சமூகத்தினருடன் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம் இந்திய சமூகத்தைச் சார்ந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களின் ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, தெக்குன் நேஷனல் (Tekun Nasional), அமனா இக்தியார் மலேசியா (Amanah Ikhtiar Malaysia), கடன் உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு, நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேலும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்படும் என்றார்.
மேலும், ஒற்றுமை அரசை சில தரப்பினரின் குற்றச்சாட்டுகள் அல்லது கருத்துக்களின் அடிப்படையில் அல்லாமல், அரசின் செயல்பாடுகள் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு இந்திய சமூகத்தினரை அவர் கேட்டு கொண்டார்.

