
கோலாலம்பூர், ஜூலை 30
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் (மித்ரா) பல்வேறு திட்டங்களின் கீழ், நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 65.5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி விநியோகிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் மடானி அரசின் திட்டங்களால் இந்திய சமூகத்தினர் தொடர்ந்து நேர்மறையான பலன்களைப் பெற்று வருகின்றனர்.
3,000-க்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர் கலந்துகொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இந்த உதவியானது கல்வி, தொழில்முனைவோர் மேம்பாடு, சமூக நலன், வழிபாட்டுத் தலங்கள், டயாலிசிஸ் சிகிச்சை உதவி மற்றும் பி40 பிரிவினருக்கான ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது என்று தெரிவித்தார்.
“வளர்ச்சி என்பது அனைவரும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் மடானி அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. எந்தவொரு சமூகமும் புறக்கணிக்கப்படக் கூடாது; நாட்டின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கப் பெற உரிமையுண்டு.
“இதன் காரணத்தினாலேயே, மடானி அரசாங்கம் ‘கல்வி மடானி’, இந்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினி உதவித் திட்டம், தமிழ்ப்பள்ளிகளுக்கான ‘ஸ்மார்ட் போர்ட்’, ‘செலிக் மடானி’, ‘ஆரோக்கிய மடானி’, உயர் கல்வி நிலைய மாணவர்களுக்கான தொடக்க உதவி நிதி, டயாலிசிஸ் உதவித் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு முனைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், மித்ராவுக்கான ஒதுக்கீட்டை 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது. இது மலேசிய இந்திய சமூகத்தின் வரலாற்றிலேயே மிக அதிகப்படியான நிதி ஒதுக்கீடாகும்,” என்று அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்ட சந்திப்பு நிகழ்ச்சியில் 3,000-க்கும் மேற்பட்ட இந்தியச் சமூகத்தினர் திரளாகப் பங்கேற்றதைத் தொடர்ந்து டத்தோஶ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்த பேராதரவானது, அரசாங்கம் மக்களின் குரலைக் கேட்பது மட்டுமின்றி, நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலமாக அவற்றுக்குத் தீர்வு கண்டு வருவதை மக்கள் அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது.
கல்வி, மனித மூலதன மேம்பாடு, வேலைவாய்ப்புகள், தொழில்முனைவு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்றும், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் இருந்து எந்தவொரு குடிமகனும் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
“கொள்கைகள் சீரான முறையில் செயல்படுத்தப்பட்டு, அதன் பயன்கள் மக்களை நேரடியாகச் சென்றடையும் போது, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை இன்னும் வலுப்பெறும்.
மேலும் நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான மலேசியாவை உருவாக்குவதே மடானி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

