மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆன்மிக உணர்வை ஏற்படுத்திய மாபெரும் தீச்சட்டி உற்சவம்

தெலுக் இந்தான், ஆகஸ்ட் 3-

பக்தியின் வெளிப்பாடாகவும், நம்பிக்கையின் அடையாளமாகவும் நடைபெற்ற தீச்சட்டி உற்சவத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா காளியம்மனின் அருளை வேண்டி தங்களின் நேர்த்திக்கடனை பக்தி பரவசத்துடன் நிறைவேற்றினர்.

தெலுக் இந்தான், ஜாலான் பண்டாரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில், இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஆலயத்தை வலம் வந்து அம்மனுக்கு தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.

வேண்டுதல்கள் நிறைவேறியதற்கான நன்றியாகவும், குடும்பத்தின் நலன், நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு, வளம் மற்றும் அமைதியை வேண்டியும் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மேளதாளங்கள் முழங்க, பக்தர்களின் “ஓம் சக்தி! பராசக்தி!” என்ற பக்தி முழக்கங்கள் ஆலய வளாகம் முழுவதும் எதிரொலிக்க, தீச்சட்டியுடன் பக்தர்கள் மேற்கொண்ட ஊர்வலம் அனைவரையும் ஆன்மிக உணர்வில் ஆழ்த்தியது.

இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட சமய நிகழ்வுகள் நடைபெற்றன. பின்னர் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்ற இத்தீச்சட்டி உற்சவம், ஸ்ரீ மகா காளியம்மன் மீது மக்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையையும், தொடர்ந்து பேணப்படும் ஆன்மிக பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் விழாவாக அமைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles