சாதனைப் படைத்தார் ;முதல் முறையாக காமல்வென்த் ஜூடோ பிரிவில் மலேசியாவிற்கு தங்கம்

கிளாஸ்கோ, ஆகஸ்ட் 3- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இதுவரை பங்கேற்று வந்த மலேசியாவிற்கு, அதன் வரலாற்றிலேயே ஜூடோ பிரிவில் நாட்டிற்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பரிசளித்திருக்கிறார் அமிர் டேனியல் அப்துல் மஜீத்.

“இதற்குப் பிறகு நான் ஒரு வாரம் ஓய்வெடுத்து என் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடலாம்.”

ஒரு மாணவராக தனது நேரம் மற்றும் வாழ்க்கை முறையைத் தியாகம் செய்ததற்கான பலன் கிடைத்த பின், அமிர் டேனியல் இவ்வாறு தனது வெற்றிக்கான உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.

கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் போட்டியில் 81 கிலோ கிராமுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெற்றியாளராக வாகை சூடிய 21 வயது அமீர் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்.

தனது பயிற்சி, படிப்பு என தினசரி அதற்கு பெரும்பாலான நேரம் செலவாகிவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதன் காரணமாகப் பிரியமானவர்களுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவாகவே இருந்ததாகவும், ஏன், தனது தாயாருடன் பேசிக் கொண்டிருக்கக் கூடப் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

“இந்தப் பதக்கம் ஒட்டுமொத்த மலேசிய மக்களுக்கானது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசிய ஜூடோ விளையாட்டிற்கு கிடைத்துள்ள முதல் தங்கப் பதக்கம் இதுவாகும், மேலும் இந்த பதக்கம் மிகவும் மதிப்புமிக்கது என்று என்னால் சொல்ல முடியும்.

சிந்திய இரத்தம், வியர்வை, கண்ணீர் மற்றும் அனைத்து தியாகங்களுக்கும் இறுதியாக மிகச் சிறந்த வெற்றி கிடைத்துள்ளது.இதற்கான தியாகம் நேரம் மற்றும் பணம் சார்ந்தது மட்டுமல்ல, குடும்பத்துடன் இருக்கும் நேரமும் கூடத்தான்.

ஒவ்வொரு நாளும் நான் பயிற்சி எடுத்துக்கொண்டு எனது படிப்பையும் தொடர வேண்டியிருந்தது. நான் நிம்மதியாக அமர்ந்து, என் தாயிடம் இன்றைய நாள் எப்படி இருந்தது என்று கேட்பதற்குக்கூட எனக்கு நேரம் இருந்ததில்லை,” என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மாணவரான அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles