தைவான் பொது பூப்பந்து: மலேசிய இரட்டையர்களுக்கு 2-வது இடம்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 3 : நாட்டின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான பியர்லி தான் – எம்.தீனா, 2026 தைவான் பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில், தரவரிசையில் இல்லாத ஜப்பானின் சுமிதே நகடே – மியு தகாஹாஷி ஜோடியிடம் நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

இத்தொடரின் முதன்மை தரவரிசை ஜோடியாகவும், உலக அளவில் 5-வது இடத்திலும் இருக்கும் பியர்லி-தீனா, உலக தரவரிசையில் 71-வது இடத்தில் உள்ள ஜப்பானிய ஜோடியின் விறுவிறுப்பான ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.

இதன் காரணமாக, முதல் செட்டில் 16-21 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கினர்.

40 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் இரண்டாவது செட் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இதில் பியர்லி-தீனா ஜோடி சிறப்பாக மீண்டு வந்து, ஆட்டத்தை தீர்க்கமான மூன்றாவது செட்டிற்கு கொண்டு செல்லும் முயற்சியில் 18-18 என புள்ளிகளை சமநிலைப் படுத்தியது.

இருப்பினும், நிதானமாக விளையாடிய நகடே-தகாஹாஷி ஜோடி, அடுத்தடுத்து மூன்று புள்ளிகளைப் பெற்று 21-18 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது செட்டைக் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தது.

“ஜப்பானிய ஜோடி எங்களைத் தாக்கி விளையாடுவதில், குறிப்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் எங்களின் தற்காப்பு ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தத் தவறை நான் கண்டிப்பாக சரிசெய்ய வேண்டும்,” என்று உலக பூப்பந்து கூட்டமைப்பு (BWF) பகிர்ந்த ஒலிப்பதிவில் தீனா தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles