
உலு திராம், நவ.27-
மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) கடந்த 80 ஆண்டுகளாக இந்தியச் சமுதாயத்திற்காக ஆற்றியுள்ள சேவைகளையும் படைத்துள்ள சாதனைகளையும் மக்களிடம் முறையாக எடுத்துச் செல்லத் தவறியதே கட்சியின் முக்கியக் குறையாக இருந்து வருவதாக அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மஇகா, தற்போது தனது 80ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், கடந்த காலங்களில் கடந்து வந்த பாதையையும் படைத்த சாதனைகளையும் நினைவுகூர்வதோடு, அடுத்த 80 ஆண்டுகளுக்கான இலக்குகளையும் செயல்திட்டங்களையும் வகுக்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மஇகா குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், கட்சி தனது பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதால் அதன் சாதனைகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை என்றார்.
எனவே, கட்சி இதுவரை ஆற்றியுள்ள பணிகள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கட்சியினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் கிளைத் தலைவர்கள், மஇகாவின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாளை நடைபெறவுள்ள மஇகா பேராளர் மாநாட்டில் கட்சியின் எதிர்காலப் பயணம் குறித்து விரிவாக ஆராயப்படும். கடந்த 80 ஆண்டுகளில் கட்சி என்னென்ன சாதனைகளைப் படைத்துள்ளது என்பதுடன், அடுத்த 80 ஆண்டுகளில் எத்தகைய பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான செயல்திட்டங்களும் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியச் சமுதாயத்தின் தொடர்ச்சியான ஆதரவு இருந்தால்தான் மஇகா அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும். அதேவேளையில், கட்சியினர் தங்களது பொறுப்புகளை உணர்ந்து திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படத் தவறினால் அது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜொகூர் மற்றும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்கள் உணர்த்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவதுதான் மஇகாவின் அணுகுமுறை என்று குறிப்பிட்ட அவர், கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையும் முறையான திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

இதற்கு உதாரணமாக, முன்பு அரை ஏக்கர் பரப்பளவில் இருந்த மஇகா தலைமையகத்திற்கான நிலத்தை இரண்டு ஏக்கராக விரிவுபடுத்தும் நோக்கில் கூடுதல் நிலம் வாங்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் கட்சியினரிடையே புதிய எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள தொகுதித் தலைவர்கள் இந்தக் கொண்டாட்டங்களைச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாகப் பாராட்டினார்.
மேலும், கட்சியின் எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்த இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி, அவர்களைத் தலைமைத்துவப் பொறுப்புகளுக்குத் தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் சுமார் 1,300 பேர் கலந்து கொண்டனர். மஇகா பேராளர் மாநாட்டிற்கு முன்னதாக நடத்தப்படும் விருந்து நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையிலானோர் பங்கேற்ற நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளதாகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

