“தமிழ் போன்ற மொழிகளில் நடக்கும் இணைய துன்புறுத்தலை AI-யால் கண்டறிய முடியாது; மனிதர்களே தேவை – ஃபஹ்மி”

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 — இணைய உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்தும் (moderate) பொறுப்பை முழுமையாக செயற்கை நுண்ணறிவிடம் (AI) ஒப்படைக்க முடியாது; ஏனெனில் சில மொழிகளின் நுணுக்கங்களை, குறிப்பாக சைபர் புல்லிங் (இணைய மிரட்டல்/துன்புறுத்தல்) தொடர்பான விவகாரங்களை அது புரிந்து கொள்ளத் தவறலாம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

குறிப்பாக, தமிழ் பேசும் சமூகத்தினரிடையே நடக்கும் இணைய பகடிவதை சம்பவங்களில் இது தெளிவாகத் தெரிகிறது என்றும், அங்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அவதூறான உள்ளடக்கங்களைச் சரியாக அடையாளம் காண்பதில் AI அடிப்படையிலான ஒழுங்குமுறை தோல்வியடையக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“இந்திய சமூகத்தினரிடையே இணைய பகடிவதை ( Cyber bullying) மிகவும் மோசமாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். மொழி சார்ந்த இந்தச் சிக்கலை AI-யிடம் மட்டுமே ஒப்படைக்க முடியாது என்று நான் டிக்டாக்கிற்கு (TikTok) தெரிவித்துள்ளேன்.

சில வாக்கியங்களின் நுணுக்கங்களை, குறிப்பாக பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் துன்புறுத்தும் சொற்களை முழுமையாகப் புரிந்து கொள்ளும் திறன் அதற்கு இல்லை.

ஆனால், டிக்டாக் ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. அவர்கள் மனித மதிப்பீட்டாளர்களின் (human moderators) எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, இப்போது AI-யைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் தொடர்பில் நான் அவர்களுக்குச் சிறிது காலம் அவகாசம் அளிப்பேன்” என்று அவர் கூறினார்.

“சமூக ஊடகத் தளங்கள் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்த AI-யைப் பயன்படுத்த முயலும்போது, ஒரு குறிப்பிட்ட மொழியில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் திறன் அவர்களுக்கு இல்லையென்றால், அது சைபர் புல்லிங்கை ஒரு பெரிய குற்றமாக மாற்றிவிடும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று செராஸில் உள்ள இம்பி மண்டபத்தில், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுடன் (PIBG) நடைபெற்ற ‘பாதுகாப்பான இணையம்’ மீதான கலந்துரையாடலைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே ஃபஹ்மி இதனைக் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles