
கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – தாபுங் ஹாஜி வாரியம் ( Tabung Haji ) தொடர்பான அரச விசாரணை ஆணைக்குழுவின் ஆர்.சி.ஐ ( RCI ) அறிக்கை மீதான விசாரணை மிக விரிவான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கட்டளையிட்டுள்ளார்.
தவறிழைத்த அனைத்து தரப்பினருக்கும் எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் அதிகாரப்பூர்வ ஃபேஸ்பூக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குற்றம் நிரூபிக்கப்படும் எந்தவொரு தரப்பினரிடமும் சமரசம் செய்து கொள்ளாமல், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முழுமையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, இன்று அதிகாலை இஸ்தானா புக்கிட் துங்குவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சந்திப்பிற்கான அனுமதியை வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது, தாபுங் ஹாஜி அரச விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்தும், பெல்டா (ஃபெல்டா) தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் குறித்தும் பிரதமரால் மாமன்னருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை (ஜூலை 29) வெளியிடப்பட்ட இந்த அரச விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, 2014 முதல் 2020 -ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தாபுங் ஹாஜி நிறுவனத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகம் தொடர்பான பல முக்கிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக மக்களவையில் ஒரு சிறப்பு அமர்வு வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறவுள்ளது.

