


கோலாலம்பூர், ஆக 9-
மலேசிய சிலம்பக் கழகத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற சிலம்ப தின விழாவில், சிலம்பக் கலைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி மூன்று மூத்த ஆசான்கள் ‘தேசிய சிலம்பக் கழக மகாகுருவாக’ அங்கீகரிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.
பாரம்பரியத் தற்காப்புக் கலையான சிலம்பத்தை மலேசியாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற பெருமைக்குரிய மகாகுரு செல்வராஜா, மகாகுரு இரவீந்திரன் மற்றும் மகாகுரு சிவா ஆறுமுகம் ஆகிய மூவருக்கு இவ்வாண்டின் ‘மகாகுரு’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மலேசியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிலம்ப ஆசான்களும் மாணவர்களும், கலையார்வலர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
சிலம்பக் கலையின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதையும், இக்கலைக்காகத் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த சான்றோர்களைக் கௌரவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இவ்விழா ஒருங்கிணைக்கப்பட்டது.
விருது பெற்ற ஆசான்கள் கழகத்தின் இந்த அங்கீகாரத்திற்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, பாரம்பரிய சிலம்பக் கலையை உயர்த்த தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் உறுதியளித்தனர்.
நிகழ்ச்சியில் மகாகுரு டத்தோ சிவா பேசுகையில், “மலேசிய சிலம்ப கழகத் தோற்றுநரும், முதல் சிலம்ப ஆசானுமான’ தமது தந்தை மகாகுரு ஆறுமுகம் அவர்களுக்கும்,
தன் ஆசான் மகாகுரு செல்வராஜா அவர்களுக்கும் , மலேசிய சிலம்ப கழக தலைவர் டாக்டர் சுரேஷ் அவர்களுக்கும் ,தலைமை மகாகுரு திரு.பெரியசாமி, கலை நுட்ப தலைவர் திரு.குணா அவர்களுக்கும், தன்
குடும்பத்தாருக்கும் மற்றும் அவரது மாணவர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

