நானிச் சிறந்த சேவையாளர் விருது – சிறந்த மலேசியர்களை உருவாக்கும் மூலதனம் ஆசிரியர்!! டத்தோ சிவநேசன் பெருமிதம்!!

சுங்கை,ஆக12: நம்பிக்கையான தலைமுறைகளை உருவாகவும் சிறந்த மலேசியர்களை உருவாக்கவும் மூலதனமாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் தான்.ஆசிரிய்ர்களின் அர்ப்பணிப்பும் அக்கறையான கற்றல் கற்பித்தலும் தான் சிறந்த மலேசியர்களை உருவாக்கும் உன்னதம் என்றும் பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.

சமுதாய உருமாற்றத்தின் மாபெரும் சக்தியாக ஆசிரியர்கள் திகழ்வதாகவும் திறன்மிக்க மாணவர் சமுகத்தையும் நம்பிக்கை மிக்க மலேசியர்களையும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்றும் அவர் மேலும் கூறினார்.

பத்தாங் பாடாங் மாவட்ட கல்வி இலாகாவின் நனிச் சிறந்த சேவையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு கூறினார்.

விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்தினைப் பதிவு செய்த டத்தோ சிவநேசன் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி மாணவர்களின் சிறந்த கல்வி பயணத்தையும் உறுதி செய்யும் ஆசிரியர்கள் காலம் கடந்தும் வரலாறாக போற்றப்பட வேண்டியவர்கள்.

மேலும்,பத்தாங் படாங் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் நிறைவான பங்களிப்பினைப் பார்க்க முடிகிறது என்ற அவர் மாவட்ட கல்வி இலாகாவின் செயல்பாடுகளும் இம்மாவட்டத்திலுள்ள பள்ளிகளின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளும் நிறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

விருது என்பது அங்கிகாரம் மட்டுமில்லை.அது நனிச் சிறந்த சேவைக்கான போற்றுதல்மிகு நன்றிகூறலும் கூட என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, விருது பெறும் ஒவ்வொருவரும் தங்களின் ஆளுமை,அனுபவம் மற்றும் பங்களிப்பினைத் தங்களின் சக தொழில் சார்ந்த நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனம் நிறைந்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.நாம் அனைவரும் ஒரே இலக்கோடு ஒன்றுப்பட்டு பயணித்தால் நமது இலக்கில் வெற்றியும் பெறலாம் என நினைவுறுத்தினார்.

மேலும்,கல்வி ஒன்றுதான் நாட்டின் நிலையான வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்காற்றும்.அது ஒரு நாட்டின் நிலையான அறிவார்த சமூகத்தை கட்டமைக்கும்.சிறந்த மலேசியர்களையும் உலகளாவிய நிலையில் மலேசியர்களின் அறிவார்ந்த முன்னேற்றத்திற்கும் கல்வி மட்டுமே நனிச் சிறந்த தீர்வாகும் என்றுரைத்த டத்தோ சிவநேசன் இன்றைய நவீனத்துவ வாழ்வியல் சூழலில் கல்வி மட்டுமே எல்லா சவால்களையும் உடைத்தெறிந்து நம் மாணவர்களை உலகளாவிய நிலையில் சிறந்த மலேசியர்களாய் அடையாளப்படுத்தும் என்றார்.

மேலும்,இன்றைய புத்தாக்க சூழலில் மலேசிய மாணவர்களும் அறிவியல் புத்தாக்க சிந்தனையில் தொடர்ந்து மிளிர்வதற்கும் தொழிற்திறன் கல்வியில் சரியான இலக்கில் பயணிப்பதற்கும் நாட்டின் கல்வி கொள்கையும் முக்கிய அம்சமாக விளங்குவதாக கூறிய அவர் பேரா மாநில அரசும் கல்வி,அறிவியல் புத்தாக்கத்தோடு தொழிற்திறன் கல்வியிலும் தனித்திவ கவனம் செலுத்தி வருவதாகவும் தனதுரையில் மேலும் கூறினார்.

கல்வி வெறும் வேலைக்கானது மட்டுமில்லை.அது அறிவார்ந்த சிந்தனை களத்தின் மாபெரும் சக்தி.மாணவர்களைக் கல்வியில் உயர்த்தும் ஆசிரியர்களும் இன்றைய நவீனத்துவத்திற்கு ஒப்ப தங்களை உருமாற்றம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்ட அவர் ஒற்றுமை,புரிந்துணர்வு,தேசிய ஒருமைப்பாடு உட்பட சிறந்த மலேசியர்கள் என்னும் உயரிய உணர்வு என அனைத்தும் விதைக்கப்படும் இடம் தான் பள்ளிக்கூடம்.அத்தகைய பெருமைமிகு பணியைத் திறன்பட ஆற்றும் அனைத்து கல்வி பணியாளர்களுக்கும் நன்றியோடு வாழ்த்துகளையும் பகிர்வதாக சிவநேசன் தெரிவித்தார்.

அதே வேளையில்,நாட்டின் கல்வி பயணத்தில் சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை பத்தாங் பாடாங் மாவட்ட கல்வி இலாகா சிறந்த முறையில் வழங்கும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் இம்மாவட்டத்தின் கல்வி சார்ந்த அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தனது ஆதரவும் பங்களிப்பும் எப்போதும் நிறைவாகவே இருக்கும் என்றும் டத்தோ சிவநேசன் உறுதி அளித்தார்.

பத்தாங் பாடாங் மாவட்ட நிலையில் நனிச் சிறந்த சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 201 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.அவர்களில் 15 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles