கல்வி, தொழில், ஆலய மேம்பாட்டிற்கு RM6.7 மில்லியன் நிதி: மலேசிய இந்தியர்களுக்கு புதிய ஊக்கம் அளிக்கிறது ‘மித்ரா’

கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 –
மலேசிய இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் (மித்ரா) மூலம் RM6.7 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ‘டியூஷன் மடானி’, ‘உயர்வு மடானி’ மற்றும் ‘தர்ம மடானி’ ஆகிய மூன்று முக்கிய திட்டங்களின் கீழ் மானிய உதவிகள் வழங்கப்பட்டன.

இன்று பிரிக்பீல்ட்ஸில் உள்ள கலாமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், மனிதவள அமைச்சரும் மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு மானிய ஒப்புதல் கடிதங்களை வழங்கினார்.

2,343 மாணவர்களுக்கு இலவச டியூஷன்!

‘டியூஷன் மடானி 2026’ திட்டத்தின் கீழ், ஏழு மாநிலங்களில் செயல்படும் 28 கல்வி மையங்களுக்கு RM2.63 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,343 எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஐந்து மாதங்களுக்கு நடைபெறவுள்ள இத்திட்டம், இலவச மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்களின் கல்வி அடைவை மேம்படுத்துவதோடு, குடும்பங்களின் கல்விச் செலவுப் பாரத்தையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

128 தொழில்முனைவோருக்கு RM3.05 மில்லியன்!

உயர்வு மடானி 2026 முதல் கட்டத்தின் கீழ், நுண் தொழில்முனைவோர், வளர்ச்சி தொழில்முனைவோர் மற்றும் உயர் வளர்ச்சி தொழில்முனைவோர் பிரிவுகளின் கீழ் 128 தொழில்முனைவோருக்கு RM3.05 மில்லியன் மானியம் வழங்கப்பட்டது.

மூன்று பிரிவுகளாக வழங்கப்பட்ட இந்த உதவி, வியாபாரங்களை விரிவுபடுத்தவும், சந்தைப் போட்டியை எதிர்கொள்ளவும், புதிய வர்த்தக வாய்ப்புகளை அடையவும் உதவும் வகையில் அமைந்துள்ளது.

இத்திட்டத்திற்காக மொத்தம் RM25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 700 தொழில்முனைவோரைச் சென்றடைவதே இலக்கு என்றும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.

முதற்கட்டத்தில் ஆவணக் குறைபாடுகளால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், “தேவையான ஆவணங்களைச் சரியாக இணைத்து இரண்டாம் கட்டத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நிராகரிப்பதே மித்ராவின் நோக்கமல்ல; தகுதியான அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு,” எனக் கூறினார்.

52 இந்து ஆலயங்களுக்கு ‘தர்ம மடானி’ உதவி!

தொடர்ந்து, ‘தர்ம மடானி’ நான்காம் கட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள 52 இந்து ஆலயங்களுக்கு RM1.04 மில்லியன் மானியம் வழங்கப்பட்டது. இதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 676 இந்து ஆலயங்களுக்கு RM13.52 மில்லியன் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிதி, ஆலயங்களில் கலாச்சார வகுப்புகள், மாணவர் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சமூக சேவை மையங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும்.

இன்னும் நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய வாய்ப்புள்ளதாகவும், மொத்தம் 1,000 ஆலயங்களைச் சென்றடைவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தின் கருத்துகள் அவசியம்!

இந்திய சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே எதிர்கால திட்டங்கள் வடிவமைக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் ரமணன், “ஒரு திட்டம் சமூகத்திற்கு எந்தளவுக்குப் பயனளிக்கிறது, இன்னும் என்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்பதைப் பொதுமக்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மக்களின் குரல் இல்லாமல் அவர்களின் உண்மையான தேவைகளை அரசாங்கம் முழுமையாக அறிய முடியாது. எனவே, பயனாளிகள் தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

மித்ரா நிதி RM150 மில்லியனாக உயர்வு!

மித்ராவின் வருடாந்திர நிதி ஒதுக்கீடு கடந்த காலங்களில் RM100 மில்லியனாக இருந்த நிலையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த கூடுதல் RM50 மில்லியனுடன் சேர்த்து, நடப்பாண்டில் அது RM150 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் ரமணன் சுட்டிக்காட்டினார்.

“கூடுதல் நிதி கிடைப்பது மட்டுமே போதாது; அது சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக வளர்ச்சியில் நிலையான முன்னேற்றத்தைக் கொண்டுவருவதே மடானி அரசாங்கத்தின் நோக்கம்,” என அவர் வலியுறுத்தினார்.

மடானி அரசாங்கம் இந்திய சமூகத்திற்கு வெறும் நிதி உதவிகளை மட்டும் வழங்காமல், மனிதவள மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்ட நீண்டகால முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டியூஷன் மடானி, உயர்வு மடானி மற்றும் தர்ம மடானி திட்டங்கள் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் முக்கிய தூண்களாக அமைகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles