AUKU சட்டம் இரத்து செய்யும் பிரதமரின் முடிவு வரவேற்க்கத்தக்கது – மாண்புமிகு சிவகுமார்!!

பத்துகாஜா,ஆக18: பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் 1971-ஐ (AUKU) அரசாங்கம் ரத்து செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் விடுத்த அறிவிப்பை தாம் வரவேற்பதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார் கருத்துரைத்தார்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, மாணவர் சுதந்திரம், கல்விச் சுதந்திரம் மற்றும் அறிவுசார் விவாதங்களுக்கான உண்மையான களங்களாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களின் ஆற்றல் ஆகியவற்றை மட்டுப்படுத்தும் நாட்டின் மிகக் கடுமையான சட்டங்களில் ஒன்றாக AUKU இருந்து வருவதாகவும் அவர் மேலும் விவரித்தார்.

மேலும், AUKU சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் குரல்களை ஒடுக்குவதற்குப் பதிலாக, விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் திறனுடையவர்களை உருவாக்க வேண்டும். மாணவர்கள் சிந்திக்கவும், வெளிப்படையாகப் பேசவும், ஒன்றிணையவும் மற்றும் ஜனநாயகச் செயல்முறைகளில் பொறுப்புடன் பங்கேற்கவும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தனது கருத்தினை அவர் வெளிப்படுத்தினார்.

இருப்பினும், இந்த ஜனநாயகச் சுதந்திரங்களைப் பயன்படுத்தும்போது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என கேட்டு கொண்ட அவர் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலோ அல்லது நாட்டின் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையிலோ இந்தச் சுதந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் டாக்டர் சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.

AUKU சட்ட ரத்து என்பது நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்—குறிப்பாக கல்விச் சுதந்திரம், பல்கலைக்கழகத் தன்னாட்சி மற்றும் மாணவர்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார்.
அதேவேளையில், நாட்டின் நலனுக்காக இச்சுதந்திரங்கள் முதிர்ச்சியான மற்றும் பொறுப்பான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மாண்புமிகு சிவகுமார் விவரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles