


பெருவாஸ், ஆக. 25-
ஆன்மிகப் பணிகளுடன் சமூகப் பொறுப்பையும் முன்னெடுத்து வரும் பேராக், பெருவாஸ், சுங்காய் பெருவாஸ் தோட்டத்தில் அமைந்துள்ள கங்கா நெகாரா ஸ்ரீ சீத்தளா மகா மாரியம்மன் ஆலயம், பெருவாஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவி வழங்கி, தமிழ்க்கல்வி மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாலயத்தின் 57ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இந்நிதியுதவி, ஆலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற கல்விசார் சமூகநல முயற்சியாக அமைந்தது.
மாணவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த உதவி, வழிபாட்டுத் தலங்கள் ஆன்மிகச் செயல்பாடுகளுடன் சமூகத்தின் எதிர்காலத் தலைமுறையை உருவாக்குவதிலும் பங்களிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக அமைந்தது.
இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பினாங்கு குற்றத்தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவரும், தேசிய குற்றத்தடுப்பு வாரியத்தின் உச்சமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ க. புலவேந்திரன், ஆலயங்களின் பங்கு வழிபாட்டுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது என வலியுறுத்தினார்.
மேலும் மாணவர்களின் கல்விக்காக செய்யப்படும் உதவி என்பது ஒரு தனிநபருக்கான உதவி மட்டுமல்ல; அது எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கான முதலீடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, ஆலயங்கள் தங்களால் இயன்ற வகையில் கல்வி, சமூகநலம் உள்ளிட்ட துறைகளில் நற்பணிகளை முன்னெடுத்து, சமூகத்தின் தேவைகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, ஆண்டுதோறும் நடைபெறும் ஆலயத் திருவிழாக்கள் வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகளாக மட்டும் அமையாமல், இப்பகுதியில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூக உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றுகூடும் தளமாகவும் அமைய வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ க. புலவேந்திரன் வலியுறுத்தினார்.
வாழ்க்கையின் பல்வேறு சூழல்களால் வேறு இடங்களில் வசிக்கும் நிலை ஏற்பட்டாலும், தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணுடனான உறவையும், அங்குள்ள மக்களுடனான சமூகப் பிணைப்பையும் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாலயத் தலைவர் அ. செல்வம், துணைத் தலைவர்களான செ. மஞ்சுளா, கு. மனோகரன் ஆகியோரின் வழிகாட்டலுடன் ஆலய நிர்வாகம், செயலவை உறுப்பினர்கள், சுற்றுவட்டார இளைஞர்கள் மற்றும் மாதர்களின் ஒத்துழைப்புடன் இவ்வாண்டு 57ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே, சிவஸ்ரீ சு. மும்மூர்த்தி குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் ஆகம விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்றன.
இத்திருவிழாவில் சுங்காய் பெருவாஸ் தோட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இப்பகுதியின் முன்னாள் தோட்டப் பாட்டாளிகள், தோட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ சீத்தளா மகா மாரியம்மனின் அருட்கடாட்சத்தைப் பெற்றுச் சென்றனர்.
எதிர்காலத்திலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், சமூக நலனுக்கும் பயனளிக்கும் பல்வேறு நற்பணிகளை முன்னெடுக்க ஆலயம் திட்டமிட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இம்முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க கொடை நெஞ்சர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான ஆதரவு அவசியம் என்றும் ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வில் டத்தோஸ்ரீ க. புலவேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர், வெங்கடேஸ்வரி இராஜகோபால் மற்றும் அவரது குடும்பத்தினர், பெருவாஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் ம. குணசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

