சுயத் தொழில் துறையில் இந்தியப் பெண்கள் ஆளுமைக் கொள்ள வேண்டும் – டத்தோ சிவநேசன் நினைவுறுத்து!!

பீடோர்,ஆக25: அரசாங்கத்தின் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களின் வாழ்வாதார நிலையையும் பொருளாதாரச் சூழலையும் மேம்படுத்திக்கொள்ள இந்தியப் பெண்கள் ப்ஒருபோதும் தயங்ககூடாது என பேரா மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் வலியுறுத்தினார்.

மேலும்,இந்தியப் பெண்கள் சுயத்தொழிலைக் கற்றுத்தேர்ந்து அத்துறையில் ஆளுமைக் கொண்டு மிளிர வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

பீடோரில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற அழகுக்கலை,சேலை கட்டுதல் மற்றும் அலங்காரத் திறன் உட்பட நகம்,பாதப் பராமரிப்பு பயிற்சிகள் நடைபெற்ற வேளையில் அதன் நிறைவுவிழாவில் பேசுகையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“Pusat Aspirasi Anak Perak (PASAK)” ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சியில் சுமார் 20 மகளிர் கலந்து கொண்ட வேளையில் திருமதி.வினிதா இராஜ் பயிற்சியை வழிநடத்தினார்.

அதுமட்டுமின்றி,”PASAK” வாயிலாக முன்னெடுக்கப்படும் இதுமாதிரியான பயிற்சிகள் வெறும் பொழுது போக்கிற்கானது அல்ல.ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் பெண்களிடையே தன்னம்பிக்கையை விதைத்து ஆளுமையான சிறுத்தொழில் முனைவர்களை உருவாக்குவதும் தான் எங்களின் இலக்கு என்றும் “PASAK” தலைவருமான டத்தோ சிவநேசன் விவரித்தார்.

இதற்கு முன்னர் புந்தோங்கில் இப்பயிற்சி நடைபெற்றதாகவும் அதனைத் தொடர்ந்து தற்போது பீடோரில் நடைபெற்றிருப்பதாகவும் கூறிய அவர் இதுவரை சுமார் 40 பேர் இத்திட்டம் வாயிலாக நன்மை அடைந்திருப்பதாகவும் அவர்கள் தொடர்ந்து இத்துறை சார்ந்து தங்களின் திறனை வளர்த்து கொண்டு பொருளாதார நிலையில் உயர்வை நோக்கி முன்னேற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

மேலும்,தொழில்துறை சார்ந்து மட்டுமில்லாமல் நமது கலை,பாரம்பரியத்தை பேணிடவும் இம்மாதிரியான பயிற்சிகள் வழி செய்வதாகவும் கூறிய டத்தோ சிவநேசன் இதற்கு முன்னர் தாய்சேய் நலன் சார்ந்த பயிற்சிகளையும் குழந்தைகளைப் பாரம்பரிய முறையில் பராமரிப்பது போன்ற பயிற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பேரா மாநில அரசங்கம் மட்டுமே இத்தகைய பயிற்சிளைத் தொடர்ந்து வழங்கி வருவதாகவும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்தியர்கள் நன்நிலைக்கு உயர வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டு கொண்டார்.

முன்னதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உணவகம்,உணவு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு “ஹலால்” சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறை பயிற்சிகள் மற்றும் வழிகாட்டிகளை வழங்கிட “PASAK” தயாராக இருப்பதாக அறிவித்தும் இதுவரை யாரும் அதுசார்ந்து எந்தவொரு பதிவோ அல்லது தொடர்போ செய்து கொள்ளவில்லை என்பது வருத்தமே என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் சுங்கையில் தொழில்திறன் பயிற்சி மையம் ஒன்று தனது சேவை மையத்தின் கீழ் இயங்கி வருவதாகவும் அதுபோல் பீடோரில் ஒரு மையம் உருவாக்கம் பெற்று வருவதாகவும் இன்னும் 2 மாதங்களில் அப்பணி நிறைவடையென்றும் கூறிய அவர் இனி பீடோரில் அந்த மையத்திலேயே பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles