மிம்கோய்னின் சிறு, நடுத்தர வர்த்தக மாநாடு, கோல்டன் விருதளிப்பு விழா; நவம்பர் 14ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது டத்தோ அப்துல் ஹமித் அறிவிப்பு

கோலாலம்பூர்: ஆக 8-
மிம்கோய்னின் 5ஆவது சிறு, நடுத்தர வர்த்தக மாநாடு, கோல்டன் தீனார் விருதளிப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இவ்விழா எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மிம்கோய்ன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமித் இதனை தெரிவித்தார்.

இந்த மாநாட்டிற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 500 பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அதே நாளில் இரவு ‘கோல்டன் தீனார் அவார்ட்ஸ்’ எனும் சிறப்பு விருது விழாவும் நடைபெறவுள்ளது.

வர்த்தகத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு சாதனை படைத்தவர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் இந்த விருது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மிம்கோய்ன் ஏற்பாட்டில் இதற்கு முன்னர் நடைபெற்ற விருது நிகழ்ச்சிகளில் துணைப் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதாக டத்தோ அப்துல் ஹமித் தெரிவித்தார்.

முதல் ஆண்டிலிருந்தே வர்த்தகம், தொழில்துறையில் சிறப்பாகச் செயல்படுபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆரம்ப கட்டத்தில் சுமார் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு தவணைகளில் சீன, மலாய் சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டதாகக் கூறிய அவர், இம் முறையும் இன வேறுபாடின்றி அனைத்து இனங்களையும் சேர்ந்த வர்த்தகர்கள், தொழில்முனைவோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

மலேசியாவின் வர்த்தகச் சூழலில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஆற்றிவரும் பங்களிப்பை அங்கீகரிப்பதுடன், அவர்களின் தொழில்முனை வெற்றிக் கதைகளை மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாகக் கொண்டு செல்வதே இத்தகைய விருது நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, மிம்கோய்ன் ஏற்பாடு செய்யும் எஸ்எம்இ மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் இணையம் வழியாக தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் டத்தோ அப்துல் ஹமித் தெரிவித்தார்.

இதற்கிடையே, மிம்கோய்னின் ஆண்டுக் கூட்டம் எதிர்வரும் அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு மிம்கோய்னுக்கு தேர்தல் ஆண்டாக இருப்பதால், அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

அமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், உறுப்பினர்களின் பங்களிப்பு, அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து ஆண்டுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மிம்கோய்னின் வளர்ச்சியிலும் எதிர்கால செயல்பாடுகளிலும் உறுப்பினர்களின் ஒற்றுமையும் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்பதால், அனைத்து உறுப்பினர்களும் தேர்தல் ஆண்டான இந்த ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என பொதுச் செயலாளர் டய்லான் அப்துல்லாஹ் கேட்டுக்கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles