லாப்பான் ஊத்தான் ஸ்ரீ மஹா மாரியம்மன் பூவாடைக்காரி ஆலய வளர்ச்சிக்கு 20,000 ரிங்கிட் நன்கொடை! டத்தோ சிவகுமார் கணபதி பிள்ளை வழங்கினார்

கோலசிலாங்கூர், செப். 16 –

ஒருகாலத்தில் இந்தியக் குடும்பங்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்த கோலசிலாங்கூர் லாப்பான் ஊத்தான் தோட்டம் இன்று மக்கள் வசிப்பிடம் இல்லாத பகுதியாக மாறியிருந்தாலும், அங்குள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் பூவாடைக்காரி ஆலயத்தின் ஆவணி திருவிழா நாளில் அந்தப் பகுதி மீண்டும் பக்தர்களால் களைகட்டியது.

தலைமுறைகள் கடந்து தொடரும் ஆலயப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நடைபெற்ற இத்திருவிழாவில், முன்னாள் தோட்டப் பாட்டாளிகள், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் என பலரும் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அலையென திரண்டு வந்தனர்.

மழை தொடர்ந்து பெய்த போதிலும் பக்தர்களின் வருகை குறையவில்லை. சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்ற பக்தர்கள், நேர்த்திக்கடனாக தீச்சட்டி ஏந்தியும் கரகம் சுமந்தும் ஆலயத்தை வலம் வந்து ஸ்ரீ மஹா மாரியம்மனை வழிபட்டனர்.

குடும்பம் குடும்பமாக ஆலயத்திற்கு வந்த பக்தர்கள், தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றியதுடன், பல ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் வாழ்ந்த தோட்ட வாழ்க்கையின் நினைவுகளையும் மீண்டும் பகிர்ந்து கொண்டனர். இதனால் இவ்வாண்டு திருவிழா சமய நிகழ்வாக மட்டுமின்றி, முன்னாள் தோட்ட மக்களை ஒன்றிணைக்கும் சந்திப்பாகவும் அமைந்தது.

இதனிடையே, ஆலயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஆதரவளிக்கும் வகையில் மக்கள் தேவஸ்தானத் தலைவர் டத்தோ சிவகுமார் கணபதி பிள்ளை 20,000 ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கினார்.

வருடாந்திர ஆவணி திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவர், ஆலய வளர்ச்சிக்கான இந்நிதியுதவியை வழங்கினார். அவரது நன்கொடைக்கு ஆலய நிர்வாகத்தினரும் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் இவ்விழாவில் சுகாதார அமைச்சரும் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட்டின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சிவபாலன் பாலசுந்தரம், புக்கிட் மெலாவாத்தி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம், கோலசிலாங்கூர் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான சமூகச் சேவையாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சுவாமி பெரியண்ணன் அடிகளார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

மக்கள் வசிக்காத நிலை ஏற்பட்டாலும், லாப்பான் ஊத்தான் தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் பூவாடைக்காரி ஆலயத்தின் மீது முன்னாள் தோட்ட மக்களும் அவர்களது குடும்பங்களும் கொண்டுள்ள பக்தியும் பற்றும் இன்றளவும் தொடர்கிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா, அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கையை மட்டுமின்றி, அவர்களது வேர்கள், உறவுகள் மற்றும் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறையுடன் இணைக்கும் நிகழ்வாகத் தொடர்ந்து திகழ்கிறது.

இவ்வாண்டு ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து வழிகளிலும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் புஷ்பநாதன் சுப்ரமணியம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles