தமிழ்ச்சமய விழா 2026 இனிதே நிறைவடைந்தது!

பத்துமலை, செப் 16-
மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை ஏற்பாட்டில், பத்துமலை தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் “தமிழ்ச்சமய விழா 2026” பேரெழுச்சியுடன் இனிதே நடைபெற்றது.

“இளைய தலைமுறையினருக்காகவே” என்ற உன்னத நோக்கில் “தலைமுறைதோறும் தமிழ்ச்சமயம்” எனும் கருப்பொருளில் இவ்விழா அமைந்திருந்தது.

முறையே மண்டபத்தில் நிறுவப்பெற்றிருந்த உலகப் பொதுமறை தந்த தமிழர் மறையாசான் திருவள்ளுவர் திருவுருவத்திற்கு மலர் வணக்கம் செலுத்தி, கும்ப மரியாதையுடன் சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்தனர்.
குத்துவிளக்கு, ஓங்கார விளக்கு ஏற்றல், இறை வாழ்த்து, நாட்டுப் பண், தமிழ் வாழ்த்து மற்றும் தொடக்க பிரார்த்தனையுடன் விழா தொடங்கியது.

வரவேற்புரை, தலைமையுரை, கருப்பொருள் விளக்க உரை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து,
தமிழ்நாடு சைவப் பேரவைத் தலைவர் சிவனடியார் கலையரசி நடராசன் அவர்களின் ஆசியுரையும்,
அமெரிக்கா நுண்ணியல் பேராசிரியர் திருமதி கலைமதி கலியபெருமாள் அவர்களின் வாழ்துரையும் காணொளி வாயிலாக திரையிடப்பட்டன.

சிறப்பு விருந்தினர்களாக வருகை அளித்திருந்த
பத்துமலை திருமுருகன் திருக்கோவில் தலைவரும் தமிழ்ச்சமய ஆர்வலருமான மாண்புமிகு தான்சிறீ ஆர். நடராஜா அவர்களும்,
மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டத்தோசிறீ மு. சரவணன் அவர்களும் சிறப்புரை ஆற்றி வாழ்த்தினர்.

விழாவின் நினைவாக ஆவணப் புத்தகத்தில் டத்தோசிறீ மு. சரவணன் அவர்கள் கையெழுத்திட்டு சிறப்பித்தார்.

பேரவை நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அறிவாயுத பயிற்சி முகாமில் பங்கேற்ற இளைய தலைமுறையினருக்கும் சான்றிதழ், பரிசு, புத்தகம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டப்பட்டனர்.

மாவட்ட அளவிலான திருமுறைப் போட்டியில் முதலிடம் பெற்ற சுங்கை சிப்புட் “சினாரான்” பாலர் பள்ளி மாணவன் செல்வன் நித்தியரசன் பாலமுருகன் அவர்களை, தமிழியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தன.

தமிழருக்கே உரிய இறையியலையும் மெய்யியலையும் மக்களிடம் கொண்டு சேர்கும் உன்னத நோக்கில், இலவயமாக நடைபெற்ற இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

“இவ்விழா மிகச் சரியான இலக்கை நோக்கி பயணிப்பதற்கான நிறைவை தருகிறது” என விழா ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி அவர்கள் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles