6.740 கிலோ எடையுள்ள கெளுத்தி மீன் ஹனாஃபிக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் தந்தது!

பெட்டாலிங் ஜெயா: செப் 21-
முதன் முறையாக போட்டியில் பங்கேற்ற டெர்ரி டோம் பெஜியோட் @ முகம்மது ஹனாஃபிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது.

நேற்று இங்குள்ள தாசிக் டத்தரான் கெலானா ஜெயாவில் நடைபெற்ற PJ Joran 2026 மீன்பிடிப் போட்டியில், 6.740 கிலோ எடையுள்ள கெளுத்தி மீனைப் பிடித்து அவர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

45 வயதான பூச்சோங்கைச் சேர்ந்த முகம்மது ஹனாஃபி, கோழியின் ஈரலை இரையாகப் பயன்படுத்தி மீனைப் பிடித்தார்.

அதிக எடையுள்ள மீனாக அவரது பிடிப்பு அமைந்ததால், அவர் RM7,000 ரொக்கப் பரிசை வென்றார்.

“இந்தப் போட்டியில் நான் முதன் முறையாகப் பங்கேற்கிறேன். உடனடியாக சாம்பியன் ஆவேன் என்று எதிர்பார்க்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளுமாறு எனது மகன்தான் வற்புறுத்தினார்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வெற்றியை எனது குடும்பத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்,” என்றார் அவர்.

இரண்டாவது இடத்தை கோம்பாக்கைச் சேர்ந்த 27 வயதான அஸ்ருல் அம்ரி முகமட் ஸைலானி பெற்றார். அவர் 6.390 கிலோ எடையுள்ள கெளுத்தி மீனைப் பிடித்து RM2,000 பரிசைத் தட்டிச் சென்றார்.

அதற்கு அவர் புழுவை இரையாகப் பயன்படுத்தினார்.

காஜாங்கைச் சேர்ந்த 60 வயதான மிஸ்லான் முகமட் ஜவஹார் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் 5.190 கிலோ எடையுள்ள கெளுத்தி மீனைப் பிடித்து RM1,000 பரிசைப் பெற்றார். அவரும் புழுவையே இரையாகப் பயன்படுத்தினார்.

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் PJ Joran 2026 நிகழ்ச்சி, தற்போது எட்டாவது ஆண்டை எட்டியுள்ளது. இம்முறை போட்டியில் 640 பேர் பங்கேற்று சிறப்பான வரவேற்பை வழங்கினர்.

சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பஹாங் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீன்பிடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன் மூலம், ஏற்பாட்டாளர்கள் நிர்ணயித்திருந்த ஆரம்ப இலக்கான 500 பங்கேற்பாளர்களை விட அதிகமானோர் கலந்து கொண்டனர்.

பெட்டாலிங் ஜெயா துணை மேயர் ஷரினாஸ் பிந்தி ஹாஜி சாம்சுதின் கூறுகையில், இந்த நிகழ்ச்சி குடும்பத்துடன் இணைந்து ஓய்வுநேரத்தைச் செலவிடுவதற்கான நடவடிக்கையாக மட்டுமின்றி, ஏரியைச் சுத்தப்படுத்தவும் நீர்ச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் உதவுகிறது என்றார்.

மேலும், இந்தப் போட்டி ஏரியில் காணப்படும் தடைசெய்யப்பட்ட சில மீன் இனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவற்றில் ஆப்பிரிக்க கெளுத்தி, “இகான் ராஜா” மற்றும் திலாப்பியா ஆகியவை அடங்கும்.

போட்டியின் போது, திலாப்பியா, பாவுங், இகான் ராஜா, கெத்துத்து மற்றும் ஹருவான் உள்ளிட்ட சுமார் 300 மீன்கள் பங்கேற்பாளர்களால் பிடிக்கப்பட்டன.

ஜபத்தான் பெரிக்கானன் நெகிரி சிலாங்கூர், OUG Worldwide Sdn. Bhd., TCE Tackles Sdn. Bhd. மற்றும் Proton ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு அதிகமாக இருந்ததால், PJ Joran நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நடத்த MBPJ முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles