
புத்ராஜெயா, செப். 22 –
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட் 2027) தொழில்நுட்பம், தொழிற்கல்வி பயிற்சி (திவெட்) பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் நற்செய்தி இடம்பெறக்கூடும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இங்கு நடைபெற்ற பயிற்றுநர், மேம்பட்ட திறன் பயிற்சி மையத்தின் (சியாஸ்ட்) 17வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், இதுகுறித்த விரிவான விவரங்களை உடனடியாக வெளியிடவில்லை.
“விரைவில் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை அறிவிக்கவுள்ளது. இந்த பட்ஜெட்டில், இங்குள்ள பட்டதாரிகள் பலர் மகிழ்ச்சியடையும் வகையில் அறிவிப்புகள் இடம்பெறும்,” என்று அவர் கூறினார்.

பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை வரும் அக்டோபர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திவெட் துறையில் உயர்திறன் கொண்ட தொழிலாளர்களின் ஊதியம் குறித்துப் பேசிய ரமணன், அத்துறையில் ஈட்டப்படும் மாதச் சம்பளம் முன்னர் சுமார் 12,000 ரிங்கிட்டாக இருந்த நிலையில், தற்போது 16,000 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொழில்துறையினர் திவெட் பட்டதாரிகளை நேர்மறையான நோக்கில் ஏற்றுக்கொள்வதை இந்த வளர்ச்சி காட்டுவதாகவும், இதன் மூலம் திறன்பெற்ற தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் பரந்த அளவில் திறந்துள்ளதாகவும் அவர் விவரித்தார்.

“நம்பிக்கையும் வாய்ப்புகளும் இங்கு நிறைந்துள்ளன. எனவே, உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து விரிவடையும் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப, திவெட் பட்டதாரிகள் தங்களது வாழ்க்கைப் பாதையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ளவும் சிறந்த வருமானத்தைப் பெறவும் அதிக வாய்ப்புகள் உள்ளதை இந்த ஊதிய உயர்வு நிரூபிப்பதாக ரமணன் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றின் வளர்ச்சி குறித்து பட்டதாரிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும், புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் மனிதர்கள் தங்களின் வேலைவாய்ப்புகளை முழுமையாக இழந்துவிட மாட்டார்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“உண்மையில் நாம் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும்; நமக்கு முன் உள்ள அதிநவீன வாய்ப்புகளை நோக்கி முன்னேற வேண்டும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொழில்துறையில் மனிதர்களுக்கான இடம் எப்போதும் இருக்கும் என்று கூறிய அவர், எனினும் நாம் மிகவும் பின்தங்கிவிட்டால் மீண்டும் வேகமெடுத்து முன்னேறுவது கடினமாகிவிடும் என்றும் எச்சரித்தார்.
இதன் காரணமாக, வேலைவாய்ப்புச் சந்தையில் எப்போதும் தங்களின் தேவையைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் திவெட் பட்டதாரிகள் தொடர்ந்து தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வதோடு புதிய தொழில்நுட்பத் திறன்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த ‘சியாஸ்ட்’ பட்டமளிப்பு விழாவில், ஷா ஆலாம் தலைமை மையம் உட்பட துணை வளாகங்களைச் சேர்ந்த 929 மாணவர்கள் தங்களின் டிப்ளோமா, உயர் டிப்ளோமா படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

