
ஷா ஆலாம், செப்.23 – 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கனமழையின்போது அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் கோத்தா கெமுனிங்கில் நிலவும் வடிகால் பிரச்சனைக்கு உரிய தீர்வு தேவை.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ச்சியான கனமழையின்போது ஸ்ரீ மூடா மற்றும் புக்கிட் கெமுனிங் உள்ளிட்ட பகுதிகள் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதனால், ஸ்ரீ மூடா, கம்போங் புக்கிட் கெமுனிங் மற்றும் கம்போங் புக்கிட் லஞ்சோங் ஆகிய பகுதிகளில் நிலவும் வடிகால் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, கோத்தா கெமுனிங் பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான மாற்றுச் சாலை ஒன்றை அமைப்பதும் அவசரத் தேவையாக உள்ளதாக பிரகாஸ் குறிப்பிட்டார்.

