பல்லின மக்களின் உணவு,பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையால் மலேசியத் தினத்தை வலுப்படுத்துவோம் – மாண்புமிகு டாக்டர் சிவகுமார்!!

பத்துகாஜா,மலேசியர்களிடையே வலுபெற்றிருக்கும் ஒற்றுமை,புரிந்துணர்வு,மத நல்லிணக்கம் ஆகியவை மேலும் வலுவாகவும் உறுதியாகவும் மேலோங்க பல்லின மக்களின் உணவு,பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் கூறுகள் பெரும் பங்காற்றுவதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

மலேசியா பல்லின உணவுக்கு புகழ் பெற்றது.பெருநாள் காலங்களில் மலேசியர்களிடையே இயல்பாகவே பல்லின மக்களின் உணவு விருப்பமான ஒன்றாக அமைந்து விடுவதையும் நினைவுக்கூர்ந்த டாக்டர் சிவகுமார் மலேசியர்களின் ஒற்றுமைக்கு உணவு முறையும் பங்காற்றுவது தனித்துவமானது என்றார்.

ரூக்குன் தேதாங்க இந்தியர் செட்டில்மெண்ட் மற்றும் டேசா சங்காட் கிராமத்து நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் மாண்புமிகு சிவகுமார் இவ்வாறு கூறினார்.

டேசா சங்காட் பொது மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உணவு திருவிழாவில் உள்ளூர் மக்கள் திரளாக கலந்து கொண்ட வேளையில் அவரவர் தனது பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து எடுத்து வந்திருந்தனர்.

இந்தியர் பாரம்பரிய முறையில் வாழை இலைகளில் பரிமாறப்பட்ட உணவை இனம் மதம் கடந்து அனைத்து இனத்தவர்களும் மகிழ்ச்சியாய்சுவைத்து உண்ட வேளையில் அது நம்மிடையே மேலோங்கியிருக்கும் ஒற்றுமை மற்றும் புரிந்துணர்விற்கான அடித்தலமாகவும் அமைந்ததாக சிவகுமார் மேலும் கூறினார்.

உணவின் சுவையோடு கடந்த கால நினைவுகளையும் பல்வேறு விடயங்களையும் பேசி மகிழ்ந்த காட்சி மலேசியர்களின் உன்னத தனித்துவத்தை எடுத்து காட்டியதாகவும் கூறிய சிவகுமார் சுதந்திர மாதத்திலும் மலேசிய நாளிலும் மலேசியர்களின் தேசப்பற்றும் ஒற்றுமை,புரிந்துணர்வும் அத்துணைப் பேரழகாய் வெளிப்படுவது நம் நாட்டிற்கே கிட்டிய பெரும் வரம் என்றார்.

நாட்டின் விடுதலை,மேம்பாடு வளர்ச்சியில் எப்பவுமே நாம் அனைவரும் ஒற்றுமையாகவும் மலேசியர்களாகவும் உயர்ந்து நின்றுள்ளோம்.

நம்மை ஒற்றுமைப்படுத்துவதும் தேசிய ஒருமைப்பாட்டை விதைப்பதில் நமது பாரம்பரியமும் உணவு முறைகளும் பண்டிகைகளும் பெரும் பங்காற்றுவதை தவிர்க்க இயலாது என்று கூறிய அவர் இம்மாதிரியான உணவு திருவிழாக்கள் வருங்காலங்களில் இன்னும் பெரும் அளவில் நடைபெற வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

அதுமட்டுமின்றி,பத்துகாஜா நாடாளுமன்றத் தொகுதியில் இப்படியொரு வியப்புமிகு கொண்டாட்டமாகவும் நமது அன்பையும் ஒற்றுமையையும் விதைக்கும் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக்குழுவிற்கு மாண்புமிகு சிவகுமார் நன்றியினைப் பதிவு செய்து கொண்டார்.

மேலும்,நமது பன்முகத்தன்மை நம்மை மேலும் நெருக்கமாக்கும்.மலேசியா மலேசியர்களுக்கு என்னும் உன்னத மலேசியாவை நாம் தொடர்ந்து உருவாக்குவோம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles