


பீடோர்,செப்25 சமூக மேம்பாட்டிற்கும் நாட்டின் உருமாற்றத்திற்கும் கல்வி ஒன்றே மூலதனம் என்றுரைத்த பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் மாணவர்கள் தங்களின் பள்ளிப்பருவத்தில் கல்வியில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
அதே வேளையில்,மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகள்,விளையாட்டு,தலைமைத்துவம்,ஒழுங்கு நெறி உட்பட தங்களின் எதிர்கால கல்வி பயணத்து உகர்ந்த அனைத்து துறைகளிலும் தனித்துவ ஆளுமையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
பீடோர் ஷேக் அப்துல் கனி இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் பாராட்டு விழாவினை த் தொடக்கி வைத்து பேசுகையில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அவர் இதனை வலியுறுத்தினார்.
மேலும்,கல்வியில் சிறந்து விளங்கும் சமூகத்தை உருவாக்கும் அதே வேளையில் உயர்நிலை மாண்பு,தேசிய உணர்வு,நாட்டுப்பற்று என வாழ்வியல் நெறியோடும் இச்சமூகத்தை கட்டமைத்து உருவாக்க வேண்டியதும் நம் கடமையாக இருப்பதாகவும் கூறினார்.
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தங்களின் கல்வியை பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி கூடங்கள் வாயிலாக தொடரும் நிலையில் கல்வியின் பின் தங்கிய மாணவர்கள் தங்களின் சிறந்த எதிர்காலத்தை தொழில் திறன் கல்வி மூலமாக உயிர்பெற செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பேரா மாநிலத்தில் “PASAK” (Pusat Aspirasi Anak Perak)
தொழில் திறன் துறை வாயிலாக நிறைய தொழில் திறன் கல்வி வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்வியில் நன்நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வாழ்வில் சிறந்த இலக்கை எட்ட ஆசிரியர்களும் பெற்றோர்கள் அம்மாணவர்களுக்கு நல்வழிகாட்டலை வழங்க வேண்டும் என்று மாநில “PASAK” தலைவரான டத்தோ சிவநேசன் கேட்டு கொண்டார்.
ஷேக் அப்துல் கனி இடைநிலைப்பள்ளி சுங்கை சட்டமன்றத்தில் அமைந்திருக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் இடைநிலைப்பள்ளியாகும்.பல்லின மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் மலாய்,இந்தியர் மற்றும் பூர்வகுடி மாணவர்களின் எண்ணிக்கை எல்லாமே சரிநிகராகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வியைப் பொருத்தமட்டில் இனம்,மதம்,மொழி கடந்து எல்லா மாணவர்களுக்கு நிறைவாக சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்திய டத்தோ சிவநேசன் மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் எல்லா வகை உதவிகளையும் பங்களிப்பையும் தாம் தொடர்ந்து வழங்குவதில் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் என்றுரைத்தார்.
முன்னதாக நடைபெறும் மாணவர் பாராட்டு விழாவிற்கு வெ.5 ஆயிரம் வழங்கியிருந்த டத்தோ சிவநேசன் எஸ்.பி.எம் மாணவர்களுக்காக வருகின்ற நவம்பர் 1,2ஆம் தேதிகள் நடைபெறவிருக்கும் மாணவர் முகாமிற்காக வெ.10 ஆயிரமும் மானியம் வழங்கினார் டத்தோ சிவநேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில்,பல்லின மாணவர்களைக் கொண்ட இப்பள்ளியில் மாணவர்களிடையே ஒற்றுமை,ஒருமைப்பாடு உட்பட புரிந்துணர்வும் மேலோங்கியிருப்பதாகவும் அதனை ஆக்கப்பூர்வமாக வளர்த்தெடுத்து வரும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்தும் நன்றியும் என்றார்.
இப்பள்ளியின் சிறந்த நிலைக்கு ஆசிரியர்களோடு பெற்றோர்களிம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட முன்னாள் மாணவர்களும் கரம்கோர்க்க வேண்டும் என்றும் நாம் அனைவரும் ஒன்றுப்பட்டால் தான் இப்பள்ளியும் இப்பள்ளி மாணவர்களும் நனிச் சிறந்த நிலைக்கு உயர முடியும் என்றும் சிவநேசன் கூறினார்.
பள்ளி முதல்வர் பேசுகையில் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து டத்தோ சிவநேசன் வழங்கி வரும் ஆதரவு நன்றி கூறியதோடு பள்ளியின் தேவைகளுக்கும் மாணவர் நலனுக்கு கேட்டவுடன் உதவிடும் டத்தோ சிவநேசனுக்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவித்தார்.
அதுபோல்,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கடந்த 2024இல் வெ.9,780 மதிப்பிலான 3 கூடாரம்,10 மேசை,100 நாற்காலிகளையும் வெ.35 ஆயிரம் மதிப்பிலான நவீன மின்விசியையும் வழங்கியிருந்த டத்தோ சிவநேசன் கடந்த 2025இல் மாணவர் கல்வி முகாமிற்காக வெ.11 ஆயிரம் வழங்கியதையும் தனதுரையில் நினைவுக்கூர்ந்தார்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற பள்ளியின் மாணவர் பாராட்டு விழாவில் கல்வி,புறப்பாடம் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களோடு நன் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

