பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: இறுதி ஒரு வாரமாவது முதன்மைச் சாலையில் கடைகள் அமைக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன்! : டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், அக். 27 –

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையை ஏற்பாடு செய்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹனா யோவிற்கு நன்றி தெரிவித்த மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், சந்தையின் தற்போதைய ஏற்பாடுகள் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் முழுமையான திருப்தியை அளிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

இச்சந்தையை ஏற்பாடு செய்வதற்குப் பல லட்சம் ரிங்கிட் செலவிடப்பட்டிருந்தாலும், வியாபாரிகளும் பொதுமக்களும் எதிர்பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் அமையவில்லை என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக, சந்தை அமைந்துள்ள பகுதியில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக வியாபாரிகள் மட்டுமின்றி, பொருட்களை வாங்க வரும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தீபாவளி சந்தையின் இறுதி ஒரு வாரத்திலாவது வியாபாரிகள் முதன்மைச் சாலையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி பெற்றுத் தருவதற்கான முயற்சிகளைத் தாம் முன்னெடுக்கவுள்ளதாக டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

இதுதொடர்பாக, நாளை கூட்டரசுப் பிரதேச அமைச்சருக்கு அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வியாபாரிகளின் கோரிக்கைகளையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தீபாவளிக் காலம் வியாபாரிகளுக்கு முக்கியமான வருமான வாய்ப்பாக இருப்பதால், அவர்கள் சிறந்த முறையில் வியாபாரம் செய்து பயனடைவதற்கான சாதகமான சூழலை உருவாக்கித் தருவது அவசியம் என்றும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

வியாபாரிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் வியாபார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles