
கோலாலம்பூர், அக். 27 –
எதிர்வரும் நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய இந்திய சமூகத்தைச் சேர்ந்த 22,000 குடும்பங்களுக்கு மனிதவள அமைச்சு (கெசுமா) அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளது.
மடானி அத்தியாவசியப் பொருட்கள் நன்கொடைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த உதவி, தீபாவளிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
“22,000 உணவுப் பொருள் கூடைகள் வழங்கப்படுவது இதுவரை இல்லாத மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். தேவையைப் பொறுத்து அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கக்கூடும். இந்தப் பொருட்கள் ஏழு நாட்களுக்குள் உள்ளூர் தலைவர்களிடம் சேர்க்கப்படும். அவர்கள் தீபாவளிக்கு முன்னதாக விநியோகத்தை நிறைவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

“இந்த உதவியின் மூலம், பயனாளிகளின் சுமையை ஓரளவுக்குக் குறைத்து, பெற்றோர் நிம்மதியாகத் தீபாவளிக்குத் தயாராவதுடன், பிள்ளைகளும் பண்டிகையின் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுவே மடானி அரசாங்கத்தின் ‘இஹ்சான்’ எனும் மனிதநேயக் கொள்கையைச் செயல்பாட்டில் வெளிப்படுத்தும் முயற்சியாகும்,” என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள பத்து கேவ்ஸ், டேவான் ராக்யாட் மண்டபத்தில், இத்திட்டத்தின் அடையாளப்பூர்வ உதவி ஒப்படைப்பு உட்பட விநியோக வாகன அணிவகுப்பைத் தனது துணை அமைச்சர் டத்தோ கைருல் பிர்தாவுஸ் அக்பர் கானுடன் இணைந்து தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இருளை அகற்றி ஒளி வெற்றி பெறுவதைக் குறிக்கும் தீபாவளிப் பண்டிகை, நம்பிக்கை, அன்பு மற்றும் பிறரின் நலனில் அக்கறை செலுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இத்திட்டம் கெசுமாவின் கீழ் இயங்கும் ஐந்து நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. அவை டேலண்ட் கார்ப், சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (பெர்கெசோ), மனிதவள மேம்பாட்டுக் கழகம் (எச்.ஆர்.டி. கார்ப்), திறன் மேம்பாட்டு நிதிக் கழகம் (பிடிபிகே), தேசிய தொழில்சார் பாதுகாப்பு – சுகாதார நிறுவனம் (நியோஷ்) ஆகியவையாகும்.
இதற்கிடையில், உதவியைப் பெற்ற பத்து கேவ்ஸைச் சேர்ந்த 48 வயதுடைய ஏ. காளியம்மாள், இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடுவதற்குத் தமக்கு உதவிய அரசாங்கத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“இந்த உதவியை நான் மிகவும் மதிக்கிறேன். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இதுபோன்ற உதவிகள் மிகவும் முக்கியமானவை. இதன் மூலம் எங்களாலும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட முடிகிறது.
“உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. உதவிகளை நம்பியே வாழ வேண்டியுள்ளது. எனது கணவருக்கும் நிரந்தரமான வேலை இல்லை,” என்று அவர் கூறினார்.

