
மலாக்கா, நவ 2-
மலாக்கா மாநிலத்தில் கடந்த 17 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்படாமல் இருந்ததாக அறிவிக்கப்பட்ட 55 வளர்ச்சித் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப் ரவூப் யூசோ வெளிப்படையான விளக்கமளிக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் துணைச் செயலாளர் சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி, மாநிலத்தின் 241 வளர்ச்சித் திட்டங்களில் 86 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், 100 திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், 55 திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதேவேளையில், 8.8 கோடி ரிங்கிட் வளர்ச்சி ஒதுக்கீட்டில் 1.952 கோடி ரிங்கிட் மட்டுமே செலவிடப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், 17 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்த 55 திட்டங்களில் எத்தனை தொடங்கப்பட்டுள்ளன, எத்தனை நிறைவடைந்துள்ளன, இன்னும் எத்தனை திட்டங்கள் தாமதமாகியுள்ளன என்பதை மாநில அரசு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், ஒவ்வொரு திட்டத்தின் நிதி ஒதுக்கீடு, செயல்படுத்தும் இடம், தற்போதைய நிலை மற்றும் நிறைவுக்கான காலக்கெடு ஆகிய விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றார்.
நிலப் பிரச்சினைகள், ஒப்பந்ததாரர்கள் தொடர்பான சிக்கல்கள், தொழில்நுட்ப அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் திட்டங்கள் தாமதமடையலாம். இருப்பினும், அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் தெளிவான கால அட்டவணையையும் அரசு முன்வைக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐந்து ஆண்டுகளுக்கான புதிய மக்கள் ஆணையைக் கோரும் முன்பு, அப் ரவூப் தலைமையிலான நிர்வாகம் தனது முந்தைய ஆட்சியின் சாதனைகளை வெளிப்படையாக நிரூபிக்க வேண்டும். புதிய ஆணை என்பது வெறும் வாக்குறுதிகளின் அடிப்படையில் அல்லாமல், மக்களால் சரிபார்க்கக்கூடிய செயல்திறன் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் பெறப்பட வேண்டும் என்றும் சிவமலர் தெரிவித்தார்.

