
கோலாலம்பூர், நவம்பர் 4 –
மக்களின் குரலை அரசாங்கத்திடம் கொண்டு சேர்ப்பதிலும், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும் தமிழ் ஊடகங்கள் முக்கியப் பாலமாகத் திகழ்வதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் வெறுமனே செய்திகளை வெளியிடும் தளங்களாக மட்டுமல்லாமல், சமூகத்தின் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் முக்கிய சக்தியாகவும் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள மெனாரா பெர்கேசோவில் இன்று நடைபெற்ற தமிழ் ஊடக நண்பர்களுடனான தீபாவளி மதிய விருந்துபசார நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒரு செய்தியைப் படிக்கும்போது அதில் இடம்பெறும் அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு மட்டுமே பொதுமக்கள் முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்ட ரமணன், அந்தச் செய்தியை உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பின்னால் இருக்கும் செய்தியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் உழைப்பும் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.
அரசியல்வாதிகள் எவ்வளவுதான் பேசினாலும், அவர்களின் கருத்துகள் மக்களைச் சென்றடைவதற்கு ஊடகங்களே முக்கியக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ் ஊடக நண்பர்கள் ஆற்றிவரும் பணிக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
தவறான தகவல்களும் அவதூறுகளும் பரவும் இன்றைய சூழலில், உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிடுவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்திய அவர், பரபரப்பான செய்திகளை வெளியிடுவதில் தவறில்லை என்றாலும், போலிச் செய்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றார்.
இதனிடையே, மலேசிய இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையும் ஒருங்கிணைந்த செயல்பாடும் அவசியம் என்று ரமணன் வலியுறுத்தினார். இனத்தையும் மதத்தையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி சமூகங்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மற்ற சமூகங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்குப் பதிலாக, இந்தியச் சமூகத்தின் தேவைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அவர், ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவதன் மூலமே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.
இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காக மடானி அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும், குறிப்பாக மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) மூலம் கல்வி, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் பி40 பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெறுபவர்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்தி நிலையான தொழில்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய ரமணன், சிறந்த திட்டமிடல் மற்றும் முறையான நிர்வாகத்தின் மூலம் மட்டுமே நீண்டகால பொருளாதார வெற்றியை அடைய முடியும் என்றார். அடுத்த ஆண்டிலும் மடானி திட்டங்களின் கீழ் மேலும் பல முன்னெடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு கூடுதல் பயனாளிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தீபாவளிப் பண்டிகை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பான தருணம் என்று குறிப்பிட்ட அவர், வெளியூர்களில் பணியாற்றுவோர் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றும் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைத்து தமிழ் ஊடக நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி தெரிவித்த ரமணன், அரசாங்கத்திற்கும் குறிப்பாக இந்தியச் சமூகத்திற்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஆற்றி வரும் பங்களிப்பைப் பாராட்டியதுடன், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

