பினாங்கு இந்து இயக்கம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வசதி குறைந்த குடும்பங்களுடன் தீபாவளி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது

தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும், தீமையை வென்று நன்மை, வெற்றி பெறுவதைக் கொண்டாடும், நம்பிக்கை, செழிப்பு மற்றும் ஆன்மிகத் தெளிவை மீட்டெடுக்கும் ஒளிமயமான திருநாளாகும். ‘தீபாவளி’ என்ற சொல், களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளைக் குறிக்கும் ‘தீபம்’ மற்றும் வரிசையைக் குறிக்கும் ‘ஆவளி’ ஆகிய சொற்களிலிருந்து உருவானது. இது வெற்றியைக் கொண்டாடும் வகையில் விளக்குகளை வரிசையாக ஏற்றி மகிழ்வதைக் குறிக்கிறது.

இவ்வாண்டு, பினாங்கு இந்து இயக்கம் (Penang Hindu Association – PHA), Temple of Fine Arts அமைப்பின் சமூக நலப் பிரிவான Klinik Derma Sivasanta உடன் இணைந்து, தனது வருடாந்திர தீபாவளி அறப்பணித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி 25.10.2026, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணிக்கு, 37, Jalan Scotland, 10450 George Town என்ற முகவரியில் அமைந்துள்ள இராமகிருஷ்ண ஆசிரம மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைப் பினாங்கு மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ’ ஸ்ரீ சுந்தரராஜூ த/பெ சோமு அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அவருடன் சமூக மேம்பாடு, நலன்புரி மற்றும் இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு லிம் சியூ கிம் அவர்களும் கலந்து கொண்டார்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்த மொத்தம் 150 வசதி குறைந்த குடும்பங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தீபாவளி நல உதவிகளைப் பெற்றனர். இவர்கள் பினாங்குத் தீவு, செபராங் பிறை மற்றும் கெடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரிங்கிட்180 மதிப்புள்ள 36 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், தீபாவளி பலகாரங்கள் மற்றும் இனிப்புகள் அடங்கிய பரிசுப் பையும் வழங்கப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரிங்கிட் 50 ரொக்க உதவியும், உடன் வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரிங்கிட் 5 வழங்கப்பட்டது. இதனுடன், தெரிவுசெய்யப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் நல உதவிகள் வழங்கப்பட்டன.

இடைநிலைக் கல்வியை முடித்தும், போதிய கல்வித் தகுதி மற்றும் நிதி வசதியின்மை காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் இந்திய மாணவர்களின் நிலை குறித்தும் பினாங்கு இந்து இயக்கம் அக்கறை கொண்டுள்ளது. இம்மாணவர்கள் திறன் அடிப்படையிலான கல்வித் திட்டங்கள் மூலம் தங்களுக்கான மாற்றுக் கல்விப் பாதைகளை அறிந்துகொள்ள இயக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்தகைய கல்விப் பாதைகள், எதிர்காலத்தில் உயர்கல்வியைத் தொடர்வதற்கும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும், வாழ்க்கையில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அடைவதற்கும் வழிவகுக்கும்.

மலேசியாவில் இந்திய இன மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்தும் பினாங்கு இந்து இயக்கம் கவலை தெரிவிக்கிறது. இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம் பாதிக்கப்படுவதுடன், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்படும் நிலையும், மலேசிய இந்தியர்களின் பாரம்பரியம் இழக்கப்படும் அபாயமும் ஏற்படலாம் என இயக்கம் அஞ்சுகிறது.

இந்திய இளைஞர்களிடையே தொழில் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து, திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையைத் தள்ளிப்போடும் மனப்போக்கு இந்நிலைக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என இயக்கம் கருதுகிறது. நிலையான வருமானம் பெற்ற தகுதியுள்ள இந்திய இளைஞர்கள் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்க முன்வர வேண்டும் என இயக்கம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

இதற்காக, தகுதியுள்ள மலேசிய இந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேட உதவும் இலாப நோக்கமற்ற திட்டத்தையும் பினாங்கு இந்து இயக்கம் செயல்படுத்தி வருகிறது. மேலதிக விவரங்களுக்கு இயக்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.

தங்களது அறப்பணித் திட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் பினாங்கு மாநில அரசாங்கம், பினாங்கு மாநகராட்சி மற்றும் மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் பினாங்கு இந்து இயக்கமும் Klinik Derma Sivasanta அமைப்பும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றன.

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற தாராளமாக நன்கொடைகளை வழங்கிய அனைத்து ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கும் எங்களது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆதரவும் பங்களிப்பும் இல்லாமல் இத்தகைய சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை.

அடுத்த ஆண்டு இன்னும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம். பிறருக்கு உதவுவதிலும் இறைவனின் அருளைப் பகிர்ந்து கொள்வதிலும் உள்ள மகத்துவத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்து!

………………………………

பி. முருகையா (P. Murugiah)
தலைவர்
பினாங்கு இந்து இயக்கம் (Penang Hindu Association – PHA)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles