
கோலாலம்பூர், நவம்பர் 4 –
வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ பங்களிப்பைச் செலுத்தத் தவறிய 598 உயர்மட்டப் பிரமுகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர்களில் முக்கியப் பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, வீட்டு வேலைத் தொழிலாளர்களைப் பணியமர்த்திய 10,033 முதலாளிகள் கட்டாய பெர்கேசோ பங்களிப்பைச் செலுத்தத் தவறியிருப்பது ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட அனைத்து முதலாளிகளும், தங்களது பங்களிப்புகளைச் செலுத்துவதற்கு வரும் டிசம்பர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.
அதற்குள் பங்களிப்புகளைச் செலுத்தத் தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இங்கு இன்று பெர்கேசோ தலைமையகத்தில் நடைபெற்ற நேபாள வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முதற்கட்டமாக, விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சட்டத்திற்கு இணங்கத் தவறுவோருக்கு அதிகபட்சமாக 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.
“அரசாங்கத்திலும் தனியார் துறையிலும் உயர் பதவிகளை வகிப்பவர்கள் உட்பட யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு கிடையாது.
“யாரையும் அவமானப்படுத்துவது எங்களது நோக்கமல்ல. தங்களது பங்களிப்புகள் செலுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். செலுத்தியிருந்தால் நன்றி. இல்லையெனில், உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள். சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை,” என்றார்.
இதற்கிடையில், மேலும் 26,669 முதலாளிகளின் பங்களிப்புக் கணக்குகளில் நிலுவைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பான மேலதிக ஆய்வுகளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
முதலாளிகள் தங்களது சட்டப்பூர்வக் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதை உறுதிசெய்ய, கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு பெர்கேசோவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரமணன் கூறினார்.
அபராதம் விதிப்பது மட்டுமே அரசாங்கத்தின் நோக்கமல்ல; ஒவ்வொரு வீட்டு வேலைத் தொழிலாளிக்கும் உரிய சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை உறுதிசெய்வதே முக்கிய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

