நேபாள வெள்ளப் பேரிடர்: மலேசியாவைச் சேர்ந்த 28 குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு அமைப்பின் நிதியுதவி – ரமணன்

கோலாலம்பூர், நவ. 4-
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மலேசியர்களின் 28 குடும்பங்கள், சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் நிதியுதவியைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், இப்பேரிடரில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 54 பேரின் விவரங்களைப் பெர்கேசோ ஆய்வு செய்ததில், 28 குடும்பங்கள் உதவி பெறுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளன என்றார்.

தகுதி பெற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி நிதியுதவியாக 3,000 ரிங்கிட் வழங்கப்படும் என்றும், அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் பெர்கேசோவின் இயலாமைத் திட்டத்தின் கீழ் உயிரிழந்தவர்களுக்கான வாரிசு ஓய்வூதியப் பலனையும் (Pencen Penakat) பெறத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் முழுமையடைந்ததும் ஓய்வூதியப் பலன்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று இங்கு நடைபெற்ற நேபாள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான பெர்கேசோ நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பெர்கேசோ இயக்குநர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால், பெர்கேசோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஸீஸ் முகமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தகுதி பெற்ற 28 குடும்பங்களில் 16 குடும்பத்தினர் மட்டுமே நேரில் வந்து உதவித்தொகையைப் பெற்றுக்கொண்டனர். ஏனைய குடும்பங்களுக்கு உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.

மொத்தம் 174,000 ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவி 28 குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.

மேலும், இதுவரை தொடர்புகொள்ளப்படாத தகுதியுள்ள குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களின் விவரங்களைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளைப் பெர்கேசோ தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

எனவே, இதுவரை தொடர்புகொள்ளப்படாத உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அருகிலுள்ள பெர்கேசோ அலுவலகத்தை அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பங்களிப்புத் தொகை செலுத்தாத தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில், 130 தொடர்புடைய அரசாங்க அமைப்புகள் உட்பட 990 சமூகப் பங்காளி அமைப்புகளைக் கொண்ட பெர்கேசோவின் சமூக ஒருங்கிணைப்புத் திட்டத்தின் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களின் துறை, வேலைவாய்ப்பின் தன்மை அல்லது முதலாளி யார் என்ற வேறுபாடின்றி, சமூகப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தொழிலாளரின் அடிப்படை உரிமை மற்றும் சமூக நீதியின் அடையாளம் என்றும் ரமணன் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles