இந்திய சமூகத்தின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க நம்பிக்கை கூட்டணி உறுதி: இந்தியத் தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு

மலாக்கா நவ 5- மலாக்கா மாநிலத் தேர்தல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலத்தை ஆட்சி செய்யும் அரசாங்கத்தைத் தீர்மானிப்பது மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சி, மக்களின் நலன், பல இன மக்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் முக்கியத் தேர்தலாகும் என நம்பிக்கை கூட்டணியின் இந்தியத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய சமூகத்தின் குரலும் நலன்களும் மாநில வளர்ச்சித் திட்டங்களில் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த ஒருமித்த குரலுடன் செயல்படுவோம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

அதேவேளையில், அசஹான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பி. தினேஷ், காடெக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கே. ஜெகசீலன் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இவ்விரு வேட்பாளர்களுக்கும் வாய்ப்பளித்த நம்பிக்கை கூட்டணி தலைமையகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

இம்முறை மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் இரு இந்திய வேட்பாளர்களும், தேசிய முன்னணி சார்பில் ஒரு இந்திய வேட்பாளரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு தீபாவளிப் பண்டிகைக்கு சில நாட்களுக்குப் பின்னர் அமைந்திருப்பது இந்திய வாக்காளர்களின் பங்கேற்பைப் பாதிக்கக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மலாக்காவில் சுமார் 40,000 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். காடெக், பெம்பான் தொகுதிகளில் மொத்த வாக்காளர்களில் சுமார் 17 விழுக்காட்டினரும், மாச்சாப் ஜெயா தொகுதியில் 14 விழுக்காட்டினரும் இந்தியர்கள் ஆவர்.

மலாக்காவிற்கு வெளியே வேலை அல்லது கல்வி காரணமாக வசிப்பவர்கள் தீபாவளியைக் கொண்டாடிவிட்டு மீண்டும் வாக்களிக்கத் திரும்ப வேண்டியிருப்பதால், கூடுதல் பயணச் செலவுகளும் விடுப்பு எடுக்கும் சிரமங்களும் ஏற்படலாம் எனக் குறிப்பிட்டனர்.

எனவே, மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் இந்தியர்கள் உட்பட அனைத்து மலாக்கா வாக்காளர்களும் நவம்பர் 14ஆம் தேதி தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற சொந்த மாநிலத்திற்குத் திரும்ப வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் வீட்டு உரிமை மற்றும் வாடகைத் திட்டங்கள், சிறு வணிகர்களுக்கு எளிதான மூலதன உதவி, பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு மானியங்கள் ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது.

அரசு குழந்தைப் பராமரிப்பு மையங்களை அதிகரிப்பதன் மூலம் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைக்கவும், ஸ்மார்ட் மலாக்கா திட்டத்தின் வழியாக நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களை எளிமைப்படுத்தி விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால வளர்ச்சியைப் பொறுத்தவரை, குத்தகை நில உரிமையாளர்கள் குத்தகைக் காலம் முடிவடைய இன்னும் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே குத்தகையை நீட்டிக்க விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை நவீன விவசாயம், உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் வளர்ச்சிப் பலன்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

சமயச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும், அரசுச் செலவுகள் வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதே நம்பிக்கை கூட்டணியின் நிலைப்பாடு என்று அவர்கள் வலியுறுத்தினர்.

முன்னதாக இன்றைய செய்தியாளர் சந்திப்பிற்கு கெஅடிலான் துணை செயலாளர் சிவமலர் தலைமையேற்ற வேளையில் மத்திய செயலவை உறுப்பினரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் ஜோனதன் வேலா, கெஅடிலான் கட்சியின் மகளிர் உதவி தலைவி சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles