
மலாக்கா, நவ 8-
மலாக்கா மாநிலத் தேர்தலின் இரண்டாவது வாரப் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மச்சாப் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் டத்தோ ஜினி லிம் சியூ லின், தனது தேர்தல் பிரசாரத்தை ஏழு ஒராங் அஸ்லி கிராமங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புகள் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக மட்டுமன்றி, பழங்குடியின மக்களின் நலன்களுக்கும் ஜனநாயகச் செயல்முறையில் அவர்களின் பங்களிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களில் இருந்த பல வாக்காளர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், பொதுவிடுமுறை தினங்களிலும் PH தேர்தல் பிரசாரக் குழுவினர் ஆர்வத்துடன் களப்பணியில் ஈடுபட்டு, கிராமப்புற மக்களை நேரில் சந்தித்ததற்கு ஜினி லிம் நன்றி தெரிவித்தார். மக்களின் தேவைகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்வதற்கு இத்தகைய நேரடி சந்திப்புகள் உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு நாளில் அனைத்து வாக்காளர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மச்சாப் ஜெயா தொகுதியில் ஜினி லிம், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ந்க்வே ஹீ செம், பிரசாந்த் குமார் பிரகாசம் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

