
மலாக்கா, நவ 8-
குறைந்த வருமானம் கொண்ட பி40 குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கல்வியும் தொழில்துறை திறன் பயிற்சியும் முக்கியப் பங்காற்றும் என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் பாயா ரும்புட் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டத்தோ அஸ்மான் அபிடின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இளைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சியான TVET மூலம் கூடுதல் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும், இதன் மூலம் தொழில்துறையில் அதிகத் தேவை உள்ள திறன்களைப் பெற்று, சிறந்த வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், அரசாங்கம் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை வழங்கி வந்தாலும், அவை குறித்த தகவல்கள் பல தகுதியான குடும்பங்களைச் சென்றடைவதில்லை என்று குறிப்பிட்டார்.

இதற்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாகப் பயிலும் பி40 குடும்ப மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் UMK பல்கலைக்கழகத்தின் ‘Program Sulung’ திட்டத்தையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
அதேவேளையில், மலாக்காவுக்கு அதிக முதலீடுகளைக் கொண்டுவருவதற்கும், குறிப்பாக உயர் தொழில்நுட்பத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் திறமையான உள்ளூர் பணியாளர்கள் அவசியம் என்றார் அவர்.

