
மலாக்கா, நவ 8-
பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் மலாக்கா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என PH மலாக்கா தலைவர் அட்லி ஸாஹாரி தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் மலாக்காவில் ஆட்சி செய்தபோது, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநில அரசாங்கமாகத் திகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார். அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தங்களது சேவை மையங்களைச் சிறப்பாக நடத்தவும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இந்த நிதி அவசியம் என்றார்.
எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில், நிதி ஒதுக்கீடு இல்லாதபோது மக்கள் சேவை மையங்களை நிர்வகிப்பதும், பொதுமக்களுக்கு உதவுவதும் சிரமமாக இருப்பதாக அட்லி தெரிவித்தார். மாவட்ட அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூலம் உதவிகள் கிடைத்தாலும், மாநில அரசாங்கத்தின் நேரடி நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், மாநில நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘Smart Melaka’ எனும் டிஜிட்டல் திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் மக்களின் உதவி கோரிக்கைகள் மற்றும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும். புகார்களின் தீர்வு நிலையைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளவும், அரசியல் பாகுபாடின்றி உதவிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் இந்த முறை உதவும் என்றார்.

