
மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 10) காலை சீரான வானிலையுடன் சுமுகமாகத் தொடங்கியது. பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது துணைவியர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கச் சென்றனர்.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 31 ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவு மையங்களும் இன்று காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டன. இதில் 9,769 ராணுவத்தினர் மற்றும் அவர்களது துணைவியர்கள், 2,762 காவல்துறையினர் என மொத்தம் 12,531 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மலாக்கா மாநில காவல்துறை தலைமையகத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் காவல்துறையினர் காலை 7.30 மணி முதலே வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். அங்குள்ள 817 காவல்துறையினர் ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ டுல்கைரி முக்தார் காலை 8.42 மணிக்கு தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் மேற்பார்வையில் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுடனும் சுமுகமாகவும் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 14ஆம் தேதி பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

