சுங்கை பெர்தாக் திடீர் வெள்ளம்: 5 பேர் பலி! மேலும் மூவரைத் தேடும் பணி தீவிரம்

Foto: BH

கோல குபு பாரு, நவம்பர் 10:

சுங்கை பெர்தாக் ஆற்றில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எட்டுப் பேரில் ஐவர், செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணி நிலவரப்படி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். எஞ்சிய மூவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதலாவதாக, மலேசியரான வி. விஜயன் (36) என்பவரின் உடல் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பெர்தாக் பாலம் அருகே கண்டெடுக்கப்பட்டதாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.

லத்தா ஜெபுஸ் பகுதியில் அவர் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 2.7 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் நால்வரின் உடல்கள் இன்று காலை 9.20 மணியளவில், லத்தா ஜெபுஸிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள செங்கேட் பாலத்தைச் சுற்றிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் அடையாளமும் குடியுரிமையும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

Foto: BH

“முதலாவது நபரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடையாளம் காணும் நடவடிக்கைக்காகத் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை கண்டெடுக்கப்பட்ட மேலும் நான்கு உடல்களை அங்கிருந்து வெளியே கொண்டு வரும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,” என்று சம்பவ இடக் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தேடல் மற்றும் மீட்புப் பணி இன்று காலை 7 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், தேடல் பகுதி நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அஷ்ருல் ரீசால் கூறினார்.

ஏ மற்றும் பி பிரிவுகளில் லத்தா ஜெபுஸிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை தேடுதல் நடைபெறுகிறது. சி மற்றும் டி பிரிவுகளில் பாலத்தின் அடிப்பகுதி மற்றும் அணைப் பகுதிகளில் தேடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

ஆற்றில் நீரோட்டம் மிக வேகமாக இருப்பதால் மீட்புப் பணியில் சவால்கள் ஏற்பட்டுள்ளன. நீரின் வேகம் தணிய சுமார் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை காத்திருந்த பின்னரே, நீர்ப்பரப்பில் தேடுதல் நடத்த முடிவதாக அவர் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளதால், நேர நெருக்கடியையும் மீட்புக் குழுவினர் எதிர்நோக்குகின்றனர்.

இதனால், மதியம் சுமார் 1 மணி வரை நிலவும் சாதகமான வானிலையைப் பயன்படுத்தித் தேடுதல் பணிகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக அவர் கூறினார்.

நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மலேசியர் ஒருவர், ஏமன் நாட்டவர் ஒருவர், இலங்கையர் ஒருவர், நேபாள நாட்டவர் ஒருவர் மற்றும் இந்திய நாட்டவர்கள் நால்வர் என மொத்தம் எட்டுப் பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயினர்.

இதனிடையே, பொழுதுபோக்கு மற்றும் மலையேற்ற நடவடிக்கைகளுக்காகப் பல்வேறு குழுக்களாக வந்திருந்த மேலும் 26 பேர், ஆற்றைச் சுற்றிய பகுதிகளில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

— பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles