
மலாக்கா, நவ 8-
பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில், மக்கள் பிரதிநிதிகள் தங்களது பதவியைப் பயன்படுத்தி சொந்தச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளாமல், மக்களின் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கிளேபாங் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஃபர்ஸானா ஹயானி முகமட் நாசிரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் செல்வம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே மடானி அரசாங்கத்தின் நிர்வாகக் கொள்கை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், சிறு வியாபாரிகள், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், நெல் விவசாயிகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் செல்வம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றார். மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தீர்வு காண்பதே மக்கள் பிரதிநிதிகளின் முக்கியப் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், 26 வயதான ஃபர்ஸானா ஹயானி, பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவமும் மாண்டரின் மொழியில் பேசும் திறனும் கொண்டவர் என்பதால், பல இன மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவும் உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் சிறந்த வேட்பாளர் என சைஃபுடின் பாராட்டினார். கிளேபாங் தொகுதியில் அவருக்கு ஆதரவளிக்குமாறும் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

