
மலாக்கா, நவ 10-
மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, இளம் தலைமுறையினரையும் குறிப்பாக ஜென் ஸீ (Gen Z) வாக்காளர்களையும் ஈர்க்கும் நோக்கில் பக்காத்தான் ஹராப்பான் ‘கோபிலிஹ் ஹராப்பான்’ என்ற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் துறையின் (JPPH) ஊடகப் பிரிவுத் தலைவர் ஜோனத்தன் வேலு கூறுகையில், இளைஞர்களுடன் திறந்த மற்றும் இருவழித் தொடர்பை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றார்.
வழக்கமான அரசியல் பிரசாரக் கூட்டங்களுக்கு மாற்றாக, காபி கடைகளில் தலைவர்களுடன் இளைஞர்கள் நேரடியாக உரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் அல்டிமெட், பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் சியெஃபுரா ஒத்மான், ஹங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஆடம் அட்லி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மலாக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ளூர் காபி கடைகளுடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் இளைஞர்களின் அரசியல் ஈடுபாட்டை அதிகரிப்பதுடன், உள்ளூர் சிறு வணிகர்களுக்கும் ஆதரவளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

