
மலாக்கா, நவ 10-
மலாக்கா மாநிலத் தேர்தல் முடிவடைந்த பின்னர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் எதிர்கால அரசியல் திசை மற்றும் புதிய அரசியல் ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என ஆடம் அட்லி அப்துல் ஹலிம் தெரிவித்துள்ளார்.
PKR மலாக்கா மாநிலத் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அவர், தற்போதைய நிலையில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதிலேயே கூட்டணி முழுக் கவனத்தையும் செலுத்தி வருவதாகக் கூறினார்.
மேலும், பெர்சத்து உள்ளிட்ட பிற கட்சிகளுடன் எதிர்காலத்தில் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது தொடர்பான எந்தவொரு முடிவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றும், இத்தகைய விவகாரங்கள் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் அடங்கிய தலைவர் மன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் பிற கட்சிகளின் அரசியல் நகர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பக்காத்தான் ஹராப்பான்
தனது அடுத்தகட்ட அரசியல் வியூகத்தைத் தீர்மானிக்கும் என்றும் ஆடம் அட்லி தெரிவித்தார்.

