
முடித்திருத்தும் நிலையங்கள் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண போராடி வரும் மனித வள அமைச்சர் வ சிவகுமாருக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.
கடந்த 2090 ஆம் ஆண்டில் இந்த மூன்று துறைகளில் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள தடை போடப்பட்டது.
பின்னர் 2019 ஆம் ஆண்டில் இந்த துறைகளுக்கான வேலை வாய்ப்பு முற்றாக மூடப்பட்டது.
இந்த மூன்று துறைகளில் PLKS எனப்படும் தற்காலிக வேலை வருகை அனுமதி வைத்திருப்பவர்கள் பொருத்தமான காலத்திற்கு நீடிக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த மூன்று துறைகளும் மேன் மேலும் பாதிக்கப்படாமல் இருக்க மனித வள அமைச்சர் சிவகுமார் போராடி வருவதை நாங்கள் நேரடியாக அறிகிறோம்.
ஒட்டுமொத்தமாக இந்த மூன்று துறைகளுக்கும் 15,000 அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையும் இதற்கு முன்னர் மனித வள அமைச்சர் சிவகுமார் கூறியிருக்கிறார்.
ஆகவே காலம் தாழ்த்தாமல் மனித வள அமைச்சர் சிவகுமார், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இந்த 15,000 அந்நிய தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கு முன்னர் ஐந்து தொழில் துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் காலங்காலமாக பல இன்னல்கள் எதிர் நோக்கி இருக்கும் முடித்திருத்தும் நிலையங்கள் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடைகளுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்க அரசாங்கம் உதவிட வேண்டும் என்று டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் இப்போது அனைவரையும் அரவணைத்து செல்கிறது.
இதில் எங்களையும் அரசு அரவணைத்து தடை செய்யப்பட்ட துறைகளுக்கான தடையுத்தரவு அகற்றப்பட வேண்டும் என்றார் அவர்

