
மலாக்கா, நவ. 11–
இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாடு, வீடமைப்பு, தொழில்முனைவோர் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், தகுதியுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று புக்கிட் கட்டில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அட்லி ஸஹாரி வலியுறுத்தினார்.
தினத்தந்திக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் பேசிய அவர், “மலாக்கா நமது இல்லம்” என்ற அணுகுமுறை அனைத்து இன மக்களையும் உள்ளடக்கியது என்றார்.
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், போர்த்துக்கீசியர்கள், செட்டி சமூகத்தினர் என அனைவரும் ஒரே இல்லத்தில் வாழும் மக்களாவர். அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இனமோ அரசியல் கருத்து வேறுபாடுகளோ தடையாக இருக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பான் மலாக்காவை நிர்வகித்த 22 மாதங்களில், இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“நீண்டகாலமாகத் தாமதமாகியிருந்த ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளித் திட்டத்திற்கு எங்களது ஆட்சியில் ஒப்புதல் வழங்கி, அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம்,” என்றார் அவர்.
இந்திய சமூகத்திற்காகச் செயல்படும் அரசு சாரா அமைப்புகளின் சமூகப் பணிகளையும் தொடர்பு வலையமைப்பையும் வலுப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மானியத்துடன் திறன் பயிற்சியும் தேவை
இந்திய சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்குக் கல்வியுடன் தொழில்முனைவோர் வளர்ச்சியும் அவசியம் என்று அட்லி குறிப்பிட்டார்.
தொழில் தொடங்குவதற்கு மானியம் வழங்குவதோடு நின்றுவிடாமல், இளம் இந்தியத் தொழில்முனைவோருக்குப் புதிய திறன்களைக் கற்றுக்கொடுக்கவும், ஏற்கெனவே உள்ள திறன்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதேவேளையில், வாழ்க்கைச் செலவினச் சுமையை எதிர்நோக்கும் குடும்பங்கள் நலத்திட்ட உதவிகளிலிருந்து விடுபட்டுவிடாமல் இருப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சொந்த நிலம் இல்லாதவர்களுக்குத் தீர்வு
இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் முக்கியச் சவால்களில் சொந்த வீடு வாங்குவதும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.
இலவச வீடுகளை வழங்கும் ‘ரூமா பெடூலி’ திட்டம் அனைத்து இனங்களுக்குமானது என்பதால், இந்தியர்களும் அதன் பயனைப் பெற வேண்டும் என்றார்.
எனினும், சொந்த நிலம் இல்லாதது சில இந்தியக் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்குத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான தீர்வை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இளைஞர்களுக்கு மாதம் 150 ரிங்கிட் வாடகையில் வீடு வழங்கும் ‘ரூமா பெர்காட்’ திட்டத்திலும் இந்திய இளைஞர்கள் பயன்பெறலாம் என்று அவர் கூறினார்.
மேலும், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் விலையில் இளைஞர்களுக்கு வீடுகளை வழங்கும் முயற்சியைத் தொடர்வதும் தங்களது கவனத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
வாக்காளர்களின் சிரமத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்
தீபாவளியை ஒட்டி மாநிலத் தேர்தல் நடைபெறுவது, வெளிமாநிலங்களில் பணிபுரியும் இந்திய வாக்காளர்களுக்கு விடுப்பு மற்றும் பயணச் செலவு தொடர்பான சிரமங்களை ஏற்படுத்துவதாக அட்லி கருத்துரைத்தார்.
தீபாவளிக்காக ஏற்கெனவே விடுப்பு எடுத்தவர்கள், வாக்களிப்பதற்காக மீண்டும் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் இருப்பதாக அவர் கூறினார்.
தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையமே நிர்ணயித்திருந்தாலும், பண்டிகைக் கால விடுமுறையையும் வாக்காளர்களின் சிரமங்களையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
கோலாலம்பூர், சிரம்பான் உள்ளிட்ட அருகிலுள்ள நகரங்களில் வசிக்கும் மலாக்கா வாக்காளர்கள் வாக்களிக்கத் திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர், சனிக்கிழமையும் பணிபுரிபவர்களுக்கு இது சவாலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
கல்வி, மருத்துவ உதவிகளுக்குக் கோரிக்கை
பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், சமூக அமைப்புகள் மற்றும் மக்கள் நிகழ்ச்சிகள் வாயிலாக இந்திய சமூகத்தினரைச் சந்தித்து, அவர்களின் தேவைகளை அறிந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
வழிபாட்டுத் தலங்களின் வசதிகளை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகள், சமூக நிகழ்ச்சிகளுக்கான உதவிகள் ஆகியவை மக்களின் முக்கியக் கோரிக்கைகளாக இருப்பதாக அவர் கூறினார்.
உயர்கல்வி தொடரும் மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“சில குடும்பங்களில் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், குடும்ப வருமானம் குறைவாக இருப்பதால் அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை. இத்தகைய குடும்பங்களுக்கு உதவி அவசியம்,” என்றார்.
மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட நெருக்கடிகளால் சட்டவிரோதக் கடன் வழங்குநர்களிடம் சிக்கிக்கொள்ளும் குடும்பங்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையையும் அறுவைச் சிகிச்சை தேவைப்பட்ட குழந்தையையும் கொண்ட ஒரு குடும்பத்தின் கடன் சுமையைக் குறைக்கத் தாம் உதவிய அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இந்தியர்கள் உள்ளிட்ட எந்தச் சமூகத்தினரும் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளிலிருந்து புறக்கணிக்கப்படக் கூடாது என்று அட்லி ஸஹாரி உறுதிபடத் தெரிவித்தார்.

