சாலை விபத்தில் உயிரிழந்த சேமிவேல் ஜெய்ராஸ் – குடும்பத்தினருக்கு வான் அசிஸா நேரில் இரங்கல்

மலாக்கா, நவ 11-

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் அசாஹான் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பி.தேனேஷின் பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்த ஜே.சேமிவேல் ஜெய்ராஸ் (62), இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, ஜாசின் மருத்துவமனைக்குச் சென்ற டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில், உயிரிழந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

ஜே.சேமிவேல் ஜெய்ராஸ், பிகேஆர் கட்சியின் அலோர் காஜா தொகுதி துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தவர். மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர், கட்சியின் வளர்ச்சிக்கும் தேர்தல் பணிகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது மறைவு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நண்பகல் சுமார் 12.45 மணியளவில் ஜாசின், ஜாலான் பொண்டோக் பத்தாங் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நியாலாஸ் பகுதியிலிருந்து அசாஹான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவரது கார், பக்காத்தான் ஹராப்பானின் அசாஹான் தலைமைத் தேர்தல் நடவடிக்கை மையத்திற்குத் திரும்ப முயன்றபோது எதிர்த்திசையில் வந்த லோரியுடன் மோதியதாக ஜாசின் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் லீ ராபர்ட் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லோரி ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை.

இதற்கிடையில், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிகேஆர் தலைவர்கள் சேமிவேல் ஜெய்ராஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது நீண்டகால கட்சிப் பணியையும், தேர்தல் பிரசாரத்தின்போது அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையையும் நினைவுகூர்ந்துள்ளனர். வரும் சனிக்கிழமை மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றிய கட்சி நிர்வாகியின் திடீர் மறைவு பக்காத்தான் ஹராப்பான் தரப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles