
மலாக்கா, நவ 12-
மலாக்கா மாநிலத் தேர்தலில் இதுவரை வெற்றி பெறாத தொகுதிகளைக் கைப்பற்றி, புதிய அரசியல் வரலாற்றைப் படைக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு PKR கட்சியிடையே எழுந்துள்ளது.
குறிப்பாக, பாயா ரும்புட், மாச்சாப் ஜெயா, ரெம்பியா ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் PKR-இன் வெற்றி வாய்ப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த மூன்று தொகுதிகளிலும் வாக்காளர் அமைப்பும் அரசியல் போட்டியின் பின்னணியும் வெவ்வேறாக இருப்பதால், தேர்தல் முடிவுகள் சுவாரஸ்யமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாயா ரும்புட் தொகுதியில் பிரதமரின் அரசியல் செயலாளரான டத்தோ அஸ்மான் அபிடின் PKR சார்பில் போட்டியிடுகிறார். அவர் பாரிசான் நேஷனல் (BN) வசமுள்ள இத்தொகுதியைக் கைப்பற்றும் சவாலை எதிர்கொள்கிறார்.
பெரிக்காத்தான் நேஷனல் (PN) சார்பில் ரஃபி அகமட்டும், பார்ட்டி பெர்சாமா மலேசியா சார்பில் அப்துல் ரஷிட் அபு பாக்கரும் களமிறங்கியுள்ளனர்.
கடந்த 2021 மாநிலத் தேர்தலில் BN இத்தொகுதியை 629 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. எனினும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரைஸ் யாசின் இம்முறை சுங்கை உடாங் தொகுதியில் போட்டியிடுவதால், பாயா ரும்புட்டில் புதிய அரசியல் போட்டி உருவாகியுள்ளது.
BN மற்றும் PN இடையிலான வாக்குப் பகிர்வு அஸ்மானின் வெற்றி வாய்ப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மாச்சாப் ஜெயா தொகுதியிலும் PKR வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து களமிறங்கியுள்ளது. இங்கு அக்கட்சியின் வேட்பாளராக டத்தோ ஜினி லிம் சியூ லின் போட்டியிடுகிறார். 2018ஆம் ஆண்டு மாச்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 2021 தேர்தலில் MCA வேட்பாளர் டத்தோ நுவே ஹீ செம்மிடம் தோல்வியடைந்தார்.
இம்முறை மீண்டும் அவரை எதிர்கொண்டு தொகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர்களுடன் பெர்சாமா கட்சி சார்பில் பிரசாந்த் குமார் பிரகாசமும் போட்டியிடுகிறார். சுமார் 45.6 விழுக்காடு மலாய், 37.4 விழுக்காடு சீன மற்றும் 14 விழுக்காடு இந்திய வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில், அனைத்து இன மக்களின் ஆதரவையும் பெறுவது ஜினிக்கு அவசியமாகும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற அனுபவம் அவருக்குச் சாதகமாக இருந்தாலும், தற்போதைய அரசியல் சூழல் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
மற்றொரு முக்கியத் தொகுதியான ரெம்பியாவை மீண்டும் கைப்பற்றுவதும் PKR-க்கு பெரும் சவாலாக உள்ளது. 2018ஆம் ஆண்டு தேர்தலில் முகமட் ஜைலானி காமிஸ் மூலம் 1,814 வாக்குகள் பெரும்பான்மையில் இத்தொகுதியை PKR வென்றது. பின்னர் அவர் UMNO கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, 2021 தேர்தலில் BN சார்பில் போட்டியிட்டு 860 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இம்முறை தொகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் PKR, முகமட் குசைரி முகமட் கமால் கண்ணனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
BN சார்பில் அகமட் நோரஸ்ரில் அப்த் அஸிஸ் போட்டியிடுகிறார். சுமார் 66.6 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் மலாய் மக்களின் ஆதரவைப் பெறுவதுடன், மலாய் அல்லாத வாக்காளர்களின் ஆதரவையும் தக்கவைத்துக் கொள்வது PKR-க்கு முக்கியமானதாகும்.
ஆகவே, பாயா ரும்புட், மாச்சாப் ஜெயா, ரெம்பியா ஆகிய மூன்று தொகுதிகளிலும் PKR மேற்கொள்ளும் தேர்தல் வியூகமும் வாக்காளர்களின் ஆதரவும் அக்கட்சியின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக அமையவுள்ளன.

