
கோலாலம்பூர், நவ. 12-
இந்திய சமூகத்தின் மதம் மற்றும் கலாச்சார உணர்வுகள் தொடர்பான விவகாரங்களில் கடந்த காலங்களில் உரத்த குரலில் எதிர்ப்பைப் பதிவு செய்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்குரிய விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கின்றனர் என்று தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் மத்திய செயற்குழு உறுப்பினரும், ம.இ.கா உலு லங்காட் தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவருமான சீ.ரே. சந்திரதேவன் @ நிலவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக, கடந்த காலங்களில் இந்திய சமூகத்தின் மதம் மற்றும் கலாச்சார உணர்வுகள் தொடர்பான பிரச்சினைகள் எழுந்தபோது, டிஏபி உள்ளிட்ட பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் அப்போதைய பாரிசான் நேஷனல் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து தங்களது எதிர்ப்புகளைத் துணிச்சலாக வெளிப்படுத்தினர்.
ஆனால், தற்போது முன்னாள் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் காலணிகளை அணிந்தவாறு குத்துவிளக்கை ஏற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அதே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியத் தலைவர்கள் ஏன் தங்களது எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்யவில்லை என்று அவர் வினவியுள்ளார்.
மற்றவர்கள் தவறு செய்யும்போது மட்டும்தான் மதம் மற்றும் கலாச்சார உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமா என்றும், கடந்த காலங்களில் உரக்கப் பேசிய கொள்கைகள் தற்போது ஏன் கேள்விக்குறியாகியுள்ளன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
யாரையும் குற்றம் சாட்டுவது தமது நோக்கமல்ல என்று குறிப்பிட்ட அவர், அனைத்து சமூகங்களின் மதம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் என்பதே தங்களது அடிப்படைக் கோரிக்கை என்றார்.
மேலும், மக்களின் மத நம்பிக்கைகளையும் கலாச்சார உணர்வுகளையும் மதிக்கும் கொள்கையானது, ஒருவரின் அரசியல் நிலைப்பாடு அல்லது வகிக்கும் பதவிக்கு ஏற்ப மாறுபடக் கூடாது என்றும் வலியுறுத்திய அவர், இவ்விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் உரிய விளக்கத்தைக் கேட்க முழு உரிமை கொண்டுள்ளனர் என்றும் சந்திரதேவன் தெரிவித்தார்.

