
மலாக்கா, நவ 12-
மலாக்கா மாநிலத் தேர்தலில் மெர்லிமாவ் சட்டமன்றத் தொகுதியில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவை எதிர்த்து போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ரஹாயு ஹம்சா (அயு), வெற்றியைப் பெறுவதற்கான நம்பிக்கையுடன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அம்னோவின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் மெர்லிமாவ் தொகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்மால் சாலே 3,248 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இம்முறையும் அவருக்கு வலுவான தேர்தல் இயந்திரம் இருப்பதை அயு ஒப்புக்கொண்டாலும், அதனை வெற்றிக்கான உத்தரவாதமாகக் கருத முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி வேறுபாடுகளைப் பார்க்காமல் அனைத்து மக்களின் வீடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருவதாகக் கூறிய அயு, வெற்றி பெற்றால் அரசியல் சார்பின்றி அனைவருக்கும் சமமான சேவையை வழங்குவதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாக்குகளைப் பெறுவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை என்றும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், பெண்கள் மற்றும் குடும்ப நலன், இளைஞர்கள், கல்வி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

