
கோல லங்காட், நவ 13-
முஸ்லிம் அல்லாத மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் கருத்து குறித்து மஇகா, எம்ஐபிபி, மசீச, கெராக்கான் ஆகியவை தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று கோல லங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் வலியுறுத்தினார்.
இந்தியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறும் கட்சிகள், அவர்களின் கண்ணியம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது மவுனம் காப்பது ஏன் என்று அவர் வினவினார்.
ஒருவரின் செயல்பாடுகளை மதத்தின் அடிப்படையில் மதிப்பிடுவது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்ட அவர், ஹாடி தனது கருத்தைத் திரும்பப் பெற்றுப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசியல் நலன்களைவிட அனைத்து இன மக்களின் கண்ணியத்திற்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஹரிதாஸ் தெரிவித்தார்.

