ஏற்றுமதி பொருட்களின் கண்காணிப்பை மலேசியா கடுமையாக்க வேண்டும்!அரசாங்க வருவாய் இழப்பைத் தடுக்க இந்தோனேசியாவைப் பின்பற்றுக – டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வலியுறுத்தல்

கோலாலம்பூர், நவ 15-

அரசாங்கத்திற்கு ஏற்படும் வரி மற்றும் சுங்க வருவாய் இழப்புகளைத் தடுக்கும் வகையில், செம்பனை எண்ணெய், பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் ஏற்றுமதி கண்காணிப்பை மலேசியா மேலும் கடுமையாக்க வேண்டும் என்று மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் உண்மையான மதிப்பைவிடக் குறைவான தொகையை விலைப்பட்டியலில் குறிப்பிடும் முறைகேடுகளால் அரசாங்கத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க இந்தோனேசியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்மாதிரியாகக் கொண்டு, மலேசியாவும் தனது தற்போதைய ஏற்றுமதி கண்காணிப்பு முறையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

மலேசியாவில் பல்வேறு மின்னணு கண்காணிப்பு முறைகள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளுக்கிடையே தகவல் பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்தோனேசியா தனது டிஎஸ்ஐ அமைப்பின் மூலம் ஆரம்பக்கட்டமாக சுமார் 6,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிலக்கரி, செம்பனை எண்ணெய் மற்றும் இரும்புக் கலவை உலோகங்களின் ஏற்றுமதியைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தப் புதிய கண்காணிப்பு நடவடிக்கைகள் 2027 ஜனவரி மாதம் முழுமையாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ஏற்றுமதி ஆவணங்களில் குறிப்பிடப்படும் பொருட்களின் அளவும் மதிப்பும் உண்மையில் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜெயந்திரன் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, கடல்சார் துறை ஆய்வாளர் நசேரி காலிட் கூறுகையில், அரசாங்க அமைப்புகள் தனித்தனியாகச் செயல்படுவதைத் தவிர்த்து, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தகவல் பகிர்வை மேம்படுத்த வேண்டும் என்றார்.

இதன் மூலம் வரி ஏய்ப்பு, அரசாங்க வருவாய் இழப்பு மற்றும் ஏற்றுமதி முறைகேடுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles