ஸ்ரீ மூடா ஶ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் ஆலய மேம்பாட்டுக்கு மாட் சாபு நிதியுதவி

ஷா ஆலாம், நவ 20,

ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடாவில் அமைந்திருக்கும் ஶ்ரீ சுவர்ண மஹா மாரியம்மன் ஆலய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், கோத்தா ராஜா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு தமது தனிப்பட்ட நிதியிலிருந்து 5,000 ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கினார்.

ஆலயத்தின் தற்போதைய மேம்பாட்டுப் பணிகளை கடந்த திங்கட்கிழமை நேரில் பார்வையிட்ட அவர், நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியதுடன், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், ஆலயத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதி வாயிலாகவும் ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஆலயத்தின் மொத்த மேம்பாட்டுத் திட்டத்திற்கான செலவு RM18.3 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதுவரை சுமார் 70 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

எஞ்சியுள்ள மேம்பாட்டுப் பணிகள் 2027-ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1985-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டமைப்பில், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட சிறிய புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக , ஆலய நிர்வாகத்தின் துணைத் தலைவர் சுகுமாரன் முத்துசாமி, மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆலய சீரமைப்பு பணிகள் முழுமையடையும்போது , இவ்வாலயம் வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி, அப்பகுதி மக்களின் சமூக – கலாசார நடவடிக்கைகளுக்கான மையமாகவும், பூக்கடைகள், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை வகுப்புகள் மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சிகளுக்கான வசதிகளையும் உள்ளடக்கியிருக்கும்.

அத்துடன், ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உணவு தயாரித்தல் மற்றும் உணவு வழங்கும் பகுதிகளை விரிவுபடுத்தவும், கூடுதல் வாகன நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்தவும், குறிப்பாக அப்பகுதி மக்கள் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணும் வகையில், ஆலயத்தைச் சுற்றி நடைபயிற்சிக்கான பாதையொன்றும் அமைக்கப்படவுள்ளதாக சுகுமாறன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles