புதிய அவசர எச்சரிக்கையைப் பெற கைபேசி மென்பொருளைப் புதுப்பிக்குமாறு MCMC அறிவுறுத்து

ஷா ஆலாம், நவ 20-

நாட்டில் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய முன்னறிவிப்பு அபாய எச்சரிக்கை அமைப்பின் (EWS) கீழ் அவசர அறிவிப்புகளைத் தங்களது சாதனங்கள் பெறுவதை உறுதிச் செய்ய, மலேசியர்கள் தங்களது கைபேசிகளின் இயங்குதளங்களைப் (Operating Systems) புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ, பதிவு செய்யவோ அல்லது தனிப்பட்ட சேவைக்குச் சந்தா செலுத்தவோ தேவையின்றி, குறிப்பிட்ட புவியியல் பகுதிகளுக்குள் உள்ள இணக்கமான கைபேசிகளுக்கு ஒரே நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்ப இந்த அமைப்பு ‘செல் பிராட்காஸ்ட் சிஸ்டம்’ (Cell Broadcast System) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) தெரிவித்தது.

இறுதித் தொழில்நுட்ப உறுதிப்படுத்தலுக்கு உட்பட்டு, iOS 27.2 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் ஆப்பிள் ஐபோன் 11 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள், ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் ஆண்ட்ராய்டு கைபேசிகள் மற்றும் EMUI 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஹுவாவெய் (Huawei) சாதனங்கள் ஆகியவை இந்த EWS எச்சரிக்கைகளை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மக்கள் தங்களது சாதனங்களுக்குக் கிடைக்கும் அண்மைய மென்பொருள் புதுப்பிப்புகளை (Software updates) நிறுவி, கைபேசியை மறுதொடக்கம் (Restart) செய்து, பொருந்தக்கூடிய இடங்களில் அவசர எச்சரிக்கை அமைப்புகள் (Emergency alert settings) இயக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த EWS அமைப்பை அறிமுகப்படுத்தவும், எச்சரிக்கைகள் எவ்வாறு வழங்கப்படும் என்பதை விளக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் பேரிடர் தயார்நிலையை ஏற்படுத்துவதில் ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஊடகத் தலைமை ஆசிரியர்களுடன் இன்று சிறப்பு விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டதாக MCMC அறிக்கையில் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles