
கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குச் சிறப்புக் கல்விச் சுற்றுப்பயணம்!
ஷா ஆலாம்: கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை நேரில் பார்வையிட்டு, ஜனநாயக நடைமுறைகள் குறித்து அறிந்துகொண்டனர்.
SJKT HICOM, SJKT Emerald மற்றும் SJKT Seafield ஆகிய தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கல்விச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டனர்.
மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகள், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புகள் மற்றும் மாநில நிர்வாகத்தில் சட்டமன்றத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை மாணவர்களுக்கு நேரடியாக விளக்கும் நோக்கில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் விதத்தையும், மக்களின் பிரச்சினைகள் எவ்வாறு விவாதிக்கப்பட்டு மாநில அளவில் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் மாணவர்கள் நேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.
இத்தகைய கல்விச் சுற்றுப்பயணங்கள் மாணவர்களிடையே அறிவு, தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க உதவும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற சேவை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்த சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்திற்கும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உணவு வழங்கி ஆதரவளித்த சிலாங்கூர் மாநில முதலமைச்சரின் அரசியல் செயலாளர் சைஃபுடின் அவர்களுக்கும் சேவை மையம் நன்றி தெரிவித்துள்ளது.
“இன்றைய தலைமுறைக்குக் கல்வி அளிப்போம்; நாளைய தலைவர்களை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் இத்தகைய கல்வி முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

